பச்சை பட்டுடுத்தி குமரி பகவதி அம்மன்... இன்று முதல் 3 நாட்களுக்கு ஓணம் திருவிழா!
இன்று முதல் மூன்று நாட்களுக்கு கேரள எல்லை மாவட்டமாக கன்னியாகுமரியில் புகழ் பெற்ற பகவதி அம்மன் கோவிலில், அம்மனுக்கு ஓணக்கோடி அணிவிக்கப்படும் என்றும் 3 நாட்களுக்கு ஓணம் திருவிழா நடைபெறும் என்றும், ஓணம் திருவிழாவினையொட்டி 3 நாட்களும் பகவதி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்று செப்டம்பர் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இன்று செப்டம்பர் 4ம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி பச்சை நிற பட்டும், செப்டம்பர் 5ம் தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண் பட்டும், செப்டம்பர் 6ம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிற பட்டும் பகவதி அம்மனுக்கு ஓணக்கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
இந்த 3 நாட்களும் காலையில் 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அபிஷேகம் முடிந்ததும் பகல் 11 மணிக்கு பகவதி அம்மனுக்கு தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம், போன்றவை அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஓணக் கோடி பட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடக்கிறது.
முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. 6 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷ பூஜை, உஷ தீபாராதனை போன்றவை நடக்கிறது. மதியம் உச்சி கால பூஜையும் உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!