மேகதாது அணை: திட்ட அறிக்கை தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி?! - துரைமுருகன் விளக்கம்!
மேகதாது அணை திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததாக வெளிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஒப்புதல் கோரி தொடர்ந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, “கர்நாடகாவுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது” என சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை அமைக்க 2018-இல் சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமத்திற்கு அனுப்பியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன்பின், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயாரிக்க மத்திய அமைச்சகத்தின் அனுமதி பெற முயன்றபோது கூட, தமிழ்நாடு அரசு அதை தடுத்து நிறுத்தி மறுமனு தாக்கல் செய்தது.
கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டதும், அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடுமையான கண்டனம் தெரிவித்தது. 2022-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் இதற்கெதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், முதலமைச்சர் பலமுறை பிரதமரை நேரில் சந்தித்து, இந்த திட்டத்துக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தினார். இதன் விளைவாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை பரிசீலிக்கவில்லை. பின்னர், 2024 பிப்ரவரி 9-ஆம் தேதி அந்த அறிக்கை மத்திய நீர்வளக் குழுமத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் முக்கிய வெற்றியாகும்.
இன்றைய உச்சநீதிமன்ற விசாரணையில், தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எனவே, மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்ததாகச் சொல்லப்படுவது முற்றிலும் தவறு.
தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமம் முன்பாகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் வலுவான வாதங்களை முன்வைத்து, மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளை எதிர்த்து தொடர்ந்து செயல்படும்” என்று கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க