அதிர்ச்சி... குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தங்க நகைகள் கொள்ளை!
திருச்சியில், குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஏலூர்பட்டி சாலையோர பகுதியில் உள்ள வீட்டில் வசிப்பவர் சபிதா (27). இவர் நேற்றிரவு தனது மகன்கள் பிரஜீத் (8), ரஞ்சித்(5), ஒன்றரை வயது பெண் குழந்தை ரக்சிதா ஆகியோருடன் தனது வீட்டிற்குள் இருந்த போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், சபிதாவின் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
இதைக்கண்ட சபிதா, அவர் யார்? என்று கேட்ட போது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரக்சிதாவின் கழுத்தில் வைத்து குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி, நகைகளை கழற்றி கொடுக்குமாறும், வீட்டில் உள்ள நகை-பணத்தை எடுத்து வருமாறும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சபிதா தான் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, மோதிரம் என 3 பவுன் நகைகளை கழற்றி அவரிடம் கொடுத்துள்ளார்.
மேலும் வீட்டில் வேறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நபர், சத்தம் போடக்கூடாது என்று மிரட்டிவிட்டு வெளியே சென்று தனது வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து சபிதா சத்தம் போட்டார்.
சபிதாவின் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் இது குறித்த தகவலின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், முசிறி துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் நடந்த போது சபிதாவின் கணவர் வீட்டில் இல்லை என்பதும், அவர் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!