80 தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 80 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தமிழ்நாட்டு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது போன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்த கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் 6.08.2025 அன்று அதிகாலை 14 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டதை மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் தனி கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. 2025ம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17வது சம்பவம் ஆகும்.
தற்போது 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும், மீனவர்கள், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளதை தனது கடிதத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளேன். எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!