நெல்லையில் பயங்கரம்... வாலிபர் வெட்டிக்கொலை.. பள்ளி மாணவர்கள் வெறிச்செயல்!
திருநெல்வேலி மாவட்டம், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் எதிரே வாலிபரை ஓட ஓட வெட்டிக்கொன்ற வழக்கில் பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் சுந்தரர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் வெங்கடேஷ் என்ற ஆனந்த்(19). பெற்றோர் இறந்து விட்ட நிலையில் வெங்கடேஷ் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். சமீபகாலமாக டவுனில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கியிருந்தபடியே வாட்டர் கேன் விநியோகம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வெங்கடேஷ் தனது நண்பர்கள் சிலருடன் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் உள்ள கடைக்கு, டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் வெங்கடேசை நோக்கி அரிவாளுடன் வந்தனர். இதைக் கண்ட அவரும், அவரது நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து ஓடிய வெங்கடேசை ஓட ஓட நடுரோட்டில் சுற்றி வளைத்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தியதில் நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த இசக்கிராஜா (19) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், “கடந்த சில நாட்களுக்கு முன் டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இசக்கிராஜா தரப்பினரின் மோட்டார் சைக்கிளும், வெங்கடேசின் மோட்டார் சைக்கிளும் மோதி உள்ளன. இது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனால் இசக்கிராஜா தரப்பினர் அந்த முன்விரோதத்தில் வெங்கடேசின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் அவர் நெல்லை சந்திப்பு பகுதிக்கு சென்றதை நோட்டமிட்டு பின்தொடர்ந்து சென்று இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்”என்பது தெரிய வந்தது.
கைதான 2 சிறுவர்களும் டவுனில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். இசக்கிராஜா பள்ளி படிப்பை முடித்துவிட்டு போட்டி தேர்வுக்காக தனியார் அகாடமியில் படித்து வருகிறார். தலைமறைவாக இருக்கும் இசக்கிராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!