undefined

32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்!

 


சென்னையில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, பரிசு பொருட்களை வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.9.2025) சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

இந்த திருண விழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம்!. முதல்-அமைச்ரின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக 32 இணையர்களுக்கு தலா 4 கிராம் தங்கம் சீர் வரிசையோடு, இன்றைக்கு உங்களது முன்னிலையில் இந்த திருமணங்களை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் சார்பாக மணமக்களுக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

இன்றைக்கு சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இல்வாழ்க்கையில இணைய இருக்கின்ற 193 இணையர்களுக்கு இன்றைக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திருமணங்களுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் அண்ணன் சேகர்பாபுவிற்கு மீண்டும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு, இதே திருமண மண்டபத்துக்கு வருகை தந்து, அறநிலையத்துறையின் சார்பில் 40 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைக்கின்ற வாய்ப்பை வழங்கினார். இப்போது மீண்டும் அந்த வாய்ப்பை வழங்கியிருக்கின்றார். கடந்த மே மாதம், நம்முடைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையிலே ஒரு முக்கியமான அறிவிப்வை வெளியிட்டார்.

இந்த ஓராண்டில் மட்டும் அறநிலையத்துறையின் சார்பாக 1000 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும் என்பது தான் இலக்கு. அதன்படி, நம்முடைய முதல்-அமைச்சர், கடந்த ஜுலை மாதம் சுமார் 775 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார். இன்றைக்கு, இங்கும், தமிழ்நாடு முழுவதும் நடத்தி வைக்கப்படுகின்ற திருமணங்களின் மூலம், அறநிலையத்துறையின் சார்பில் 1000 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து இலக்கினை அடைந்து விட்டார்.

எனக்கு பக்கத்தில் அமர்திருக்கும் இணையர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். மணமகனின் பெயர் சந்தோஷ், மணமகளின் பெயர் லட்சுமி. சந்தோஷிடம் எப்படிப்பா பெண்ணை தெரியும் என்று கேட்டேன். நான் நினைத்திருந்தது போலவே, அவர் தனக்கு காதல் திருமணம் என்று தெரிவித்தார். எப்படிப்பா பழக்கம் என்று கேட்டேன். ஒரு வருடமாக ஒரே இடத்தில் வேலை செய்கின்றோம் என்று தெரிவித்தார். மிகுந்த மகிழ்ச்சி.

ஏனென்றால் காதல் திருமணத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தும் எனக்கும் தெரியும். எனக்கும் காதல் திருமணம்தான். முதலில் பெண் ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நிறைய கஷ்ட படவேண்டும். பிறகு பெண்ணின் அப்பா, அம்மா ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை சமாதானப் படுத்தவேண்டும். அதற்கு அடுத்து பெண்ணின் மாமா, சித்தப்பா என்று எல்லோரும் கிளம்பி வருவார்கள். ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து விடுவார்கள். அவர்கள் அனைவரது சம்மதத்தையும் வாங்கிய பிறகு, பெண் முடியாது என்று மறுத்துவிடுவார். இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சினைகளையெல்லாம் சமாளித்து, இன்றைக்கு இந்த திருமணங்கள் நடைபெறுகின்றன.

இன்று நடைபெறுகின்ற திருமணங்களில் பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்கள்தான், எனவே இது அறநிலையத்துறையா, அன்பு நிலையத்துறையா என்கின்ற வகையில் அவ்வளவு காதல் திருமணங்களை அண்ணன் சேகர்பாபு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இணையர்களை பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி. எல்லோருமே நன்கு படித்துள்ளார்கள், அது கூடுதல் மகிழ்ச்சியை தருகின்றது.

50, 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் இது சாத்தியமில்லை. மணமக்கள் உங்களுடைய அப்பா – அம்மா அல்லது தாத்தா பாட்டியின் திருமண பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால், அதில் அவர்கள் படித்து வாங்கிய பட்டம் இருக்காது. மாறாக சமுதாய பெயர், அவர்களுடைய சாதிபேர் தான் இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு சாதி பெயர்கள் இருப்பதில்லை.

மணமக்கள் படித்து வாங்கிய பட்டங்களின் பெயர்கள்தான் இருக்கின்றன. இந்த பெருமை தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் இருக்கின்றது. இதற்கு காரணம், நமது திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோர் நடத்திய பல்வேறு போராட்டங்களின் காரணமாகத்தான், இத்தனை சீர்திருத்தங்களும் தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு வந்து இருக்கின்றது.

குறிப்பாக இன்றைக்கு மகளிர் நிறையேபேர் வந்திருக்கின்றீர்கள். மகளிர் மேம்பாட்டுக்காக நம்முடைய முதல்-அமைச்சர் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இந்த நேரத்தில் மணமக்களுக்கு ஒரு சிறிய அறிவுரை. அட்வைஸ் பண்ணா உங்களுக்குப் பிடிக்காது. அது எனக்கு தெரியும். இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, கூடப்பிறக்காத ஒரு அண்ணனாக இந்த அறிவுரையை சொல்கின்றேன்.

நீங்க ஒருவரையொருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் சுயமரியாதையோடு நடத்த வேண்டும். எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டுமோ, அதற்கு விட்டுக் கொடுத்து, எதற்கு விட்டுக் கொடுக்க கூடாதோ அதில் திடமாக நின்று சுயமரியாதை உணர்வுடன் உங்கள் திருமண வாழ்க்கையை வாழுங்கள். உரிமைகளை கேட்டுப்பெறுங்கள்.

முக்கியமாக, நம்முடைய முதல்-அமைச்சர் தொடர்ந்து வைக்கின்ற கோரிக்கை. உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு, ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தைகயாக இருந்தாலும், அழகான தமிழ்ப்பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறிக்கொண்டு, மணமக்கள் அனைவரும், முதல்-அமைச்சரும், திராவிட மாடலும் போல பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்! என்று தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

இந்த திருமண விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், மண்டலக் குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சி.ஹரிப்ரியா, மா.கவிதா, பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மணமக்களின் உறவினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?