நாளை சென்னை முழுவதும் 15500 போலீசார் குவிப்பு... காணும் பொங்கலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... !

 
மெரினா

இன்று உலகம் முழுவதும்  மாட்டுப்பொங்கல் பண்டிகை  உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளை  காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் பொது இடங்களில் குவிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  சென்னையை பொறுத்தவரை,  மெரினா, பெசண்ட் நகர்,   கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் பூங்கா, வணிக வளாகங்களுக்கு படையெடுப்பர்.  அந்த வகையில் நடப்பாண்டில் சுமார் 3 லட்சம் பேர் மெரினா கடற்கரைக்கு வருகை தரலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.இதனையொட்டி  சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  எவ்வித அசாம்பாவித சம்பவங்களும் நிகழாத வண்ணம் தடுக்கும் வகையில்   சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அந்த வகையில்   சென்னை மாநகர் முழுவதும் சுமார் 15,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மெரினா

 இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்   “காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உட்பட  பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில்   விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி  15,500 காவல் அதிகாரிகள்,  1,500 ஊர்க்காவல் படையினரும்   காணும் பொங்கலையொட்டி   பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.   உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள்   அமைக்கப்படும்.  7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்படும்.  அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. மேலும்  மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில்  வைக்கப்படுவார்கள்.

மெரினா
 கடற்கரை மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள்  அதில் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியில் அமர்த்தப்படுவர். அவர்கள் பைனாகுலர் மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்குவர்.   12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.   கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.  குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 3 All Terrain Vehicle மூலம் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளினர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். இவர்கள் அனைவரும் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிப்பர்.  85 காவல் ஆளிநர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம்  கண்காணிப்பர்.  அதே போல் பெசன்ட்நகர்  கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள்  , 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனம், அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் வைக்கப்படும்.    

பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போவதை தவிர்க்க  அடையாள அட்டைகள் வழங்கப்படும். அதில்  பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவை எழுதி  குழந்தைகளின் கைகளில் கட்டப்படும்.  அத்துடன்  மெரினாவில் 4 ,   எலியட்ஸ் கடற்கரையில்  4 டிரோன் கேமராக்கள்  மூலம் தீவிர கண்காணிப்பு நடத்தப்படும் .   மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள்  அனைத்திலும்  தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.  மேலும், வணிக வளாகங்கள்  மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.    பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.   சென்னை பெருநகர காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பாதுகாப்பான  பொங்கலை கொண்டாடுமாறு  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web