ஈரோடு ரயில் நிலையத்தில் 18 கிலோ வெள்ளிக்கட்டிகள் பறிமுதல்!
ஈரோடு ரயில் நிலையத்தில் அதிகாலை வந்து நின்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் நடைபெற்ற சோதனையில் 18 கிலோ வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டூரை சேர்ந்தவருக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 712 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அகில்யா நகரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது. அப்போது அங்கு பணியில் இருந்த ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை நடத்தினார்கள்.

ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஒரு பெட்டியில் இருந்து அவசரமாக ஒருவர் கீழே இறங்க முயன்றார். அவரிடம் பாதுகாப்பு படை போலீசார் விசாரித்த போது, அவர் சேலத்தில் இறங்க வேண்டியவர் என்பதும், ரெயில் சேலத்தை கடந்து ஈரோடு வந்து விட்டதால் இங்கு இறங்குவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் அவர் கொண்டு வந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அந்த பையில் வெள்ளிக்கட்டிகள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் சில இருந்தன. அது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறினார். இதனால் போலீசார் அவரை பிடித்து ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பையில் இருந்த 4 வெள்ளிக் கட்டிகளை எடைபோட்டபோது 18 கிலோ இருந்தது. மேலும் சில வெள்ளி ஆபரணங்களும் சேர்த்து மொத்தம் ரூ.27 லட்சம் மதிப்பிலான வெள்ளியை அவர் பையில் வைத்து கொண்டு வந்திருந்தார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

அவரிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணத்தை சேர்ந்த தர்மலிங்கம் (42) என்பதும், அவர் சேலத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வெள்ளிக்கட்டிகளை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. சேலம் ரெயில் நிலையத்தில் இறங்காததால் ஈரோட்டில் சிக்கிக் கொண்ட அவரிடமிருந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் வெள்ளிக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறுகையில், ‘வெள்ளிக்கட்டிகளை உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு வந்தது தவறு. இதில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்கள் உள்ளனவா? என விசாரணை நடந்து வருகிறது. மேலும், அவருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும்' என்றார்கள். அவருக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 712 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
