2 கிலோ தங்க நகைகள் மோசடி... வாடிக்கையாளர்களின் அடகு நகைகளை விற்று ஜாலியாக இருந்த வாலிபர் !
கோயம்பேட்டில் பொதுமக்கள் அடகு வைத்திருந்த சுமார் 2 கிலோ தங்க நகைகளை விற்று, அந்த பணத்தில் நண்பர்களுடன் மது அருந்தி சொகுசாக வாழ்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கெகன் ராம் (55) என்ற நபர் கோயம்பேடு சரஸ்வதி நகர் பகுதியில் அடகு கடை நடத்தி வந்தார். கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் சுனில் (25) கடையை கவனித்து வந்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று, பின்னர் வட்டி மற்றும் அசலுடன் மீட்டுக்கொள்வது வழக்கம். ஆனால் சில வாரங்களுக்கு முன் கடை திடீரென மூடப்பட்டு காணாமல் போனது. சுனிலின் மொபைல் எண் ‘சுவிட்ச் ஆஃப்’ என வந்ததால், சந்தேகமடைந்த பொதுமக்கள் வீட்டு உரிமையாளரை தொடர்பு கொண்டனர். அப்போது சுனில் குடும்பத்துடன் இரவோடு இரவாக ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கோயம்பேடு போலீசில் பலரும் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த சுனிலை ரகசிய தகவலின் அடிப்படையில் மாறுவேடத்தில் கைது செய்தனர்.

விசாரணையில் சுனில் கூறியதாவது:
“அப்பா இறந்த பிறகு கடையை நடத்த ஆரம்பித்தேன். மக்கள் அடகு வைத்த நகைகளை மற்ற கடைகளில் விற்று பணம் பெற்று நண்பர்களுடன் மது அருந்தியும் ஜாலியாகவும் வாழ்ந்தேன். பின்னர் நகைகளை மீட்க வந்தவர்கள் அதிகரிக்க, பயந்து வீட்டை காலி செய்து ராஜஸ்தானுக்கு ஓடினேன். ஆனால் சென்னைக்கு திரும்பியபோது போலீசாரிடம் சிக்கி விட்டேன்.”
போலீசார் தெரிவித்ததாவது:
“சுனில், பொதுமக்கள் அடகு வைத்த சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்க நகைகளை கடந்த ஒரு ஆண்டில் விற்றுள்ளார். அந்த பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்துள்ளார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் காவலில் எடுத்து, நகைகள் விற்கப்பட்ட இடங்கள் மற்றும் தொடர்புடையவர்களை விசாரித்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
இந்த சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
