மினி லாரி கவிழ்ந்து 5 பெண்கள் உட்பட 22 பேர் படுகாயம்!
தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு மலை கிராமத்தில் மினி லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுகுப்பம் மலை கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள், திருப்பத்தூரில் நடந்த கிராமத்தினர் ஒருவரின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மினி லாரியில் 30க்கும் மேற்பட்டோர் மலையில் இருந்து நேற்று மதியம் பயணம் செய்தனர். மினி லாரியை அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார்.
திருப்பத்தூரில் நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நேற்று மாலை 5 மணியளவில் மீண்டும் புதூர்நாடு நடுகுப்பத்துக்கு திரும்பினர். நடுகுப்பம் அருகே மினி லாரி சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், நடுகுப்பம், தகரகுப்பம், புதூர்நாடு உள்ளிட்ட மலைக் கிராமங்களை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இது குறித்து தகவலறிந்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமானதால் அவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர். மலைக்கிராமத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!