8-வது ஊதியக் குழு அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள உயர்வு எப்போது?!
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழுவை அமைக்கும் தீர்மானத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அரசு ஊழியர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு நடைமுறைக்கு ஒரு படி அருகில் வந்துள்ளது.
பொதுவாக ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் குறித்து பரிசீலனை செய்ய புதிய ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. கடந்த 7-வது ஊதியக் குழு 2014-ல் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு முதல் புதிய சம்பள ஒழுங்குகள் நடைமுறைக்கு வந்தன.

இந்நிலையில், 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலவி வந்தது. இதற்கான கொள்கை ஒப்புதல் 2025 ஜனவரியில் மத்திய அரசால் வழங்கப்பட்டது. பின்னர் சில தாமதங்களுக்குப் பிறகு, ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு தனது பரிந்துரைகளை உருவாக்கி மத்திய அரசிடம் தாக்கல் செய்ய அதிகபட்சமாக 18 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் 2026 ஜனவரி மாதத்திலிருந்து 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய சம்பள உயர்வுகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், குழு இடைக்கால அறிக்கை ஒன்றை முன்வைத்தால், அதன் அடிப்படையில் மத்திய அரசு முன் தேதியிட்ட (retrospective) சம்பள உயர்வையும் வழங்க வாய்ப்பு உள்ளது.
இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் தற்போதைய ரூ.18,000-லிருந்து ரூ.26,000 ஆக உயரக்கூடும் என நிதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர்.
மாநில அரசுகள் மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், முந்தைய 7-வது ஊதியக் குழு போன்று சில சலுகைகளை வழங்கும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
