மரம் விழுந்ததில் வங்கி பெண் மேலாளர் பலி!! சென்னையில் பரிதாபம்!!

 
விபத்து

சென்னை போரூர் மங்கலம் நகரில் வசித்து வந்தவர் வாணி கபிலன். இவருக்கு வயது 57. இவர் கே.கே நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் வங்கிப்பணி முடிந்து நேற்று மாலை வாணிகபிலன் தனது காரின் பின் பக்க இருக்கையில் தனது தங்கையுடன் அமர்ந்திருந்தார். கார் கேகே நகர் லட்சுமண சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக கர்நாடக வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த மரம் ஒன்று திடீரென்று வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கத்தில் பலமாக விழுந்தது.

இதில் காரின் பின் பக்கத்தில் அமர்ந்திருந்த வாணிகபிலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது தங்கை எழிலரசி மற்றும் கார் ஓட்டுனர் கார்த்திக் ஆகியோர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்த அசோக் நகர் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரின் மீது விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

விபத்து
கே.கே நகர் போலீசார் பலியான வங்கி மேலாளர் வாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த எழிலரசி, கார் ஓட்டுனர் கார்த்திக் கேகே நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வழக்குப்பதிவு செய்த போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சம்பவம் நடந்த இடத்தில் மழை நீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டதாகவும், அதனால்தான் பிடிமானம் இல்லாமல் மரம் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியது என்று கூறப்பட்டது.மேலும் மரத்தை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டதால்தான் வாணி கபிலன் மரணமடைந்தார் என்று சமூக வலைதளங்களில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விபத்து

இது குறித்து சென்னை மாநகராட்சி தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், விபத்து நிகழ்ந்த பகுதிக்கு 10 அடிக்கு முன்பாகவே பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து 4 நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால் மண்ணின் ஈரத்தன்மையாலும், பழமையான மரம் என்பதாலும்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 2 நாள்களாக மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறவில்லை’’ என்று தனது விளக்கத்தில் கூறியுள்ளது.


எதிர்பாராத நேரத்தில் பெய்து வரும் மழை காரணமாக மண்ணில் ஆங்காங்கே ஈரத்தன்மை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பொது மக்கள் தாமாகவே முன் வந்து தங்கள் பகுதிகளில் இருக்கும் பழமையான மரம் குறித்த தகவல்களை மாநகராட்சிக்கு முன்னதாகவே தெரிவித்தால், வரப்போகும் பருவ மழையை எளிதில் எந்த வித விபத்தும் இல்லாமல் எதிர்கொள்ளலாம். தகவல்களை பெறும்பட்சத்தில் சென்னை மாநகராட்சி, பழமையான மரங்களின் கிளைகளை வெட்டுவது அல்லது வேரோடு அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இதனால் இது போன்ற விபத்துகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து மாநகராட்சிக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web