கிளியோபாட்ராவின் நீராவி குளியல்... 1,000 ஆண்டுகள் பழமையான மூலிகைகளைத் தேடி கடல் கடந்து சென்ற டாக்டர் அக்பர் கவுசர்!

- எழுத்தாளர் ஜே.வி.நாதன்
 
அக்பர் கவுசர்

துபாய் நாட்டில் மொத்தம் 192 நாடுகள் பங்கேற்ற ‘எக்ஸ்போ-2020’ (கொரோனா பாதிப்பால் தாமதமாக)1-10-2021 ல் துவங்கி, 31-3-2022ல் நிறைவு பெற்றது. 1080 ஏக்கர் பரப்பளவில் நடந்த இந்தப் பொருட்காட்சியில், அவரவர் நாட்டின் கலாச்சாரம், வாழ்வியல், மருத்துவம், விஞ்ஞானம், கல்வி, கண்டு பிடிப்புகள் ஆகியவற்றை மற்ற உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தும் வகையில் தங்கள் சொந்தச் செலவில் அமைத்த அரங்குகளில் காட்சிப்படுத்துவதன் மூலம் மற்ற நாடுகளுடன் வணிகம் மற்றும் அந்நியச் செலாவணி பெருக்கும் வாய்ப்புகளை இந்த எக்ஸ்போ வகுத்துத் தந்தது.

மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் டாக்டர். அக்பர் கவுசர்,  காசினிக்கீரை டாக்டர் என்றால் அனைவருக்கும் புரியும்) துபாய் எக்ஸ்போ பொருட்காட்சியில் பல நாடுகளின் மூலிகை மருத்துவப் பயன்பாடுகளை நேரில் கண்டு வர எண்ணினார். தன் மருமகன் டாக்டர் தமீமுஜ்ஜாமா மற்றும் உதவியாளர் அனுப்சிங் ஆகியோருடன் 8.3.2022 அன்று துபாய்புறப்பட்டார்.

கிளியோபாட்ரா

டாக்டர் அக்பர் கவுசரைப் பற்றிப் பலரும் அறியாத இரு தகவல்கள் வாசகர்களுக்காக இதோ... வாணியம்பாடியில்  ‘ஆரோக்கிய விநாயகர் ஆலயம்’ என்ற ஒன்றைத் தன் சொந்தச் செலவில் கட்டி, ஆலயச் சுவரில் 108 விநாயகர் திருவுருவைப் பதித்து, மயிலாப்பூர் ஆலய அர்ச்சகர்களைக் கொண்டு குடமுழுக்கு நிகழ்த்தியவர் இவர்.  மேலும், தமிழகம் முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களின் தல விருட்சங்களை ஆய்வு செய்து, பல நூல்கள் எழுதியிருக்கிறார். தவிர,  108 ஏக்கர்பரப்பில் அவர் உருவாக்கியுள்ள ‘மொகல்கார்டன்’ என்ற தோட்டத்தில் இந்து ஆலயத் தல மரங்களைப் பயிரிட்டு வளர்த்து வருவதோடு, ஒவ்வொரு மரத்தின் அருகிலும் தல விருட்சத்தின் பெயரைப் பலகையில் எழுதிக் காட்சிப்படுத்தவும் செய்திருக்கிறார்.

கடந்த மார்ச் 8ம் தேதி துபாய் சென்ற டாக்டர் அக்பர் கவுசர் 16 நாட்கள் அங்கிருந்த பின், திரும்பி வந்திருக்கிறார். துபாயில் அவர் சந்தித்த சுவாரஸ்யமான விஷயங்கள் என்ன? நம்முடன் பகிர்ந்து கொண்டார். ‘‘துபாய் எக்ஸ்போ-2020’ அரங்குகளில் பல நாட்டு மருத்துவ மூலிகைகளைப் பார்வையிட்ட பின், அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டிருந்த ‘குளோபல் வில்லேஜ்’ என்ற இடத்தில் ஏராள மருத்துவ அரங்குகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஈரானி மார்க்கெட் பகுதியில் ஆயிரக்கணக்கான மூலிகை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளும் இருந்தது ரொம்பவுமே உபயோகமாக இருந்தது.  உலகின் எல்லா விதமான மூலிகைகள், காய்கறிகள் அங்கு எளிதில் கிடைக்கின்றன. 

லூலு மார்க்கெட் எனுமிடத்தில் உலகின் அனைத்து நாடுகளிலும் விளைந்த பலாப் பழங்களை வரவழைத்து, பெரும்காட்சியாக வைத்திருந்தார்கள். பலாப்பழம் கொண்டு  தயாரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள் அங்கு பார்வைக்கு இருந்தன. அதன் துவக்க விழாவில் நானும் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன் ஆகியோரும் மற்றும் பலரும் பங்கு பெற்றோம். 

அக்பர் கவுசர்

இவற்றைத் தவிர, துபாய் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் நீராவிக் குளியல் மசாஜ் ஹமாம் செண்டரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாணியம்பாடியில் என் மூலிகைத் தோட்டத்திலும் நீராவிக் குளியல் ஹமாம் கட்டிடம்அமைத்திருக்கிறேன். இதனைக் காண்பதற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு துபாயிலிருந்து ஒரு குழுவினர் வந்திருந்தனர். அவர்களைநான் இப்போது துபாயில் சந்தித்தேன். அவர்கள் மூலமாக மன்னர் குடும்பக் குளியல் மையத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதி கிடைத்தது. பல்லாயிரம் கோடி ரூபாய் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நீராவிக் குளியல் மையம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்து நாட்டில் அழகுராணி கிளியோபாட்ரா பயன்படுத்திய நீராவிக் குளியல் மையம், மன்னர் ப்ரோஹா காலத்து வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டு கட்டப்பட்டிருந்தபடியே உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். துபாய் குளியல் மையத்தில் அற்புத அழகியான கிளியோபாட்ரா சிலையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

கிளியோபாட்ரா நீராவிக் குளியல் மையம் அமைக்கப்படுவதற்கு அடிப்படையான அந்தச் சுவடுகளை (manuscript) நான் காண விரும்பினேன். துபாயில் 25 ஆண்டுகளாக யுனானி மருத்துவம் செய்து வரும் டாக்டர் சையது அசதுத்தீன் அவர்களின் நட்பு கிடைத்து, துபாயின் புகழ் பெற்ற சலாவுதீன் சாலையில் அமைந்திருக்கும்  ‘ஜுமா அல் மாஜித் செண்டர் ஃபார் கல்ச்சர் அண்ட் ஹெரிடேஜ்’ என்ற நூலகம் பற்றி விவரித்தார். அங்கு தான் அந்தச் சுவடுகள் இருப்பதாகச் சொன்னார்.

‘‘அந்தப் பிரம்மாண்ட நூலகத்தை உருவாக்கியவர், ‘ஜுமா அல் மாஜித்’ என்பவர். அவர், துபாயின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். துபாயின் பணக்காரர் பட்டியலில் 3-வது இடத்திலுள்ளவர். மிகச் சிறந்த கல்வியாளர். பலக கல்லூரிகள், பள்ளிகள் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களில், ஏழை மாணவ மாணவியருக்குக் கல்வி இலவசம்.

அக்பர் கவுசர்
அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமியர் ஆட்சி புரிந்த நாடுகளின் வரலாறு, பண்பாடு, கல்வி, மருத்துவம், ஆய்வுகள், பரம்பரை நாகரிகம் தொடர்பான சுவடுகளை (கையெழுத்துப் பிரதி) சேகரித்து, உலகின் மிகச் சிறந்த நூலகமாக இதை அவர் உருவாக்கியிருக்கிறார்.

ஒரு லட்சம் சதுர அடியில் மூன்று அடுக்குகளில் நூலகத் தலைமையகம் அமைந்துள்ளது. துபாயில் இதற்கு  80 கிளை நூலகங்கள் உள்ளன. தலைமை நூலகத்தில் மூன்றரை லட்சம் தலைப்புகளில் நூல்கள் உள்ளன. கிளை நூலகங்களில் லட்சக்கணக்கான தலைப்புகளில் நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கையால் எழுதப்பட்டதைப் பதப்படுத்தி, 15,000 தலைப்புகளில் 8,000 தொகுப்புகளாக அழகிய முறையில் பைண்டிங் செய்து வைத்திருக்கிறார்கள்.

தவிர, உலகம் முழுவதுமிருந்து பல நூற்றாண்டுப் பழமையான அரிய பல்துறை நூல்கள்பெறப்பட்டு, 9,000 மைக்ரோபிலிம் வடிவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பழங்கால ஓலைச்சுவடிகள், காகிதங்களில் எழுதப்பட்டு, கிழிந்து, தூள் தூளாக இருந்தாலும் அவற்றை விஞ்ஞான முறையில் பதப்படுத்தி, நவீன முறையில் பைண்டிங் செய்யும் இயந்திரங்கள் இங்கு உள்ளன. மாணவர்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் பழமையான ஆவணங்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் வழிமுறைகள் இலவசப் பயிற்சியாக அளிக்கப்படுகிறது. அங்கு சென்று பாருங்கள்!’’ என்றார.

உடனடியாக, தமிழ்நாட்டில் இருக்கும் என் மகன் டாக்டர் முதஸ்ஸீர், மருமகள் டாக்டர் ஹீனாகவுசர் ஆகியோருக்குப் போன் செய்து நான் எழுதிய 370 மருத்துவ நூல்களை எடுத்துக் கொண்டு துபாய்க்கு வந்து சேருமாறு தெரிவித்தேன். அவர்கள் நான் கேட்ட நூல்களுடன் 19-3-2022 அன்றுஅதிகாலை,  விமானத்தில் துபாய் வந்து சேர்ந்தார்கள்.

அரபு, பாரசீகம், உருது மொழியிலிருந்து தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நான் மொழி பெயர்த்து வெளியிட்ட நூல்கள்,  ‘தெய்வீக மருத்துவம்’ என 15 வருடங்களாக நான் நடத்தி வரும் மாத இதழ்கள் நிரம்பிய இரண்டு சூட்கேஸ்களைச் சுமந்து கொண்டு அந்த மாபெரும் நூலகத்துக்குச் சென்றேன்.

அக்பர் கவுசர்

வரவேற்பறைக்குச் சென்று என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து  ‘‘இந்தியாவிலிருந்து வருகிறேன். அரபு மொழியிலிருந்து மொழி பெயர்த்த மருத்துவ நூல்களை, உங்கள் நூலகத்துக்கு நன்கொடையாக அளிக்க விரும்புகிறேன். உங்கள் நூலகத்தினைச் சுற்றிப்பார்க்க அனுமதி வழங்க வேண்டும்!’’ என்று கோரிக்கை வைத்தேன். மிகுந்த கெடுபிடியான இடம் என்று முன்பே தெரிவித்திருந்தார்கள். எனவே, கொஞ்சம் அச்சமாகவே இருந்தது.

அரை மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவேற்பறைக்கு வந்து எங்களைப் புன்முறுவலோடு வரவேற்றனர். தேநீர் கொடுத்து உபசரித்தனர். எங்களுக்கு அச்சம் நீங்கியது. அந்த அதிகாரிகளில் ஒருவர் என்னை வெகுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு,  ‘‘நீங்க காசினி டாக்டர் தானே? நான் உங்களை டி.வி.யில் பார்த்திருக்கிறேன்!’’ என்றார்.

துபாய் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான ஒருவரின் இடத்தில் தமிழ் ஒலிக்கிறது என்று மகிழ்ந்தேன்.  ‘‘நான் தமிழ்நாட்டில், கடைய நல்லூரைச் சேர்ந்தவன். திவான் மொஹித்தின் சையது அலிஎன்பது என்பெயர். 20 ஆண்டுகளாக இங்கு உதவியாளராகப் பணிபுரிகிறேன்’’ என்றார் அவர்.

என் வேலை சுலபமாகி விட்டது. என்னைப் பற்றி அவர்கள் மொழியில் தெளிவா கச் சொல்ல ஓர் இலவச மொழிபெயர்ப் பாளரை இறைவன் அனுப்பி வைத்துவிட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

சூட்கேஸ்களில் இருந்த என் நூல்களை எடுத்துத் தனித்தனியாகப் பார்வைக்கு வைத்தேன். அவை என்ன் என்று கேட்டார்கள் தலைமை நூலகர்களான அப்துல் ரஹ்மான் மற்றும் பாஹவது ஆகியோர்.   ‘‘நான் அரபு மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்குப் பெயர்த்த நூல்களை உங்க நூலகத்துக்கு நன் கொடையாகக் கொடுப்பதற்குக் கொண்டு வந்திருக்கிறேன்..’’என்றேன். என்ன ஆச்சர்யம்! ஐந்தே நிமிடங்களில், அந்த நூலக நிர்வாகத்தில் இருந்த ஆசியக்கண்டத்தின் பொறுப்பாளர் டாக்டர் ஹசிதின் பென்சிகிபா, (எகிப்து நாட்டைச் சார்ந்தவர்) அங்கு வந்துவிட்டார். ஒவ்வொரு நூலையும் மிகவும் ஆர்வத்துடன் பக்கம் பக்கமாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அதன் பின் என்னைப் பார்த்தார். அருகில் வந்து என்னைக்கட்டிப் பிடித்து முத்தமழை பொழிந்தார்.‘‘நான் இந்தியாவுக்குப் பலமுறை வந்திருக்கின்றேன். வேலூர் நகரத்திற்கும் வந்திருக்கின்றேன். வேலூர் கோட்டையின் எதிரில் உள்ள ஹசரத்மக்கான் நூலகத்தில் உள்ள நானூறு ஆண்டு பழமையான சுவடுகளை ஸ்கேனிங் செய்து கொண்டு வந்திருக்கின்றேன்!’’ என்று சொன்னார்.     

பெருமூச்சுடன் மனம் நிம்மதி அடைந்தது. திக்கற்ற துபாயில் உறவாடும் நெஞ்சங்களைக் கண்டு புதியதோர் நம்பிக்கை ஏற்பட்டது.     கண்ணியமான முறையில், ஒரு மன்னருக்கு அளிக்கப்படும் மரியாதைக்கு நிகரான மதிப்புடன் நூலகத்தின் ஒவ்வொரு அறையையும் என்னைச் சுற்றிப்பார்க்க வைத்தார்கள். ஒவ்வொரு ஹாலிலும் உள்ள பல்வேறு நாட்டின் சுவடுகளையும், நூல்களைப் பற்றியும் விளக்கினார்கள். அந்த நூலகத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு மூன்று நாட்களானது. எனக்கு வேண்டிய மருத்துவ மூலிகைச் சுவடுகள் எதுவோ அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அதன் நூலக எண்ணைக் குறித்துக் கொண்டே வந்து, அந்தப் பேப்பரை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுத்தேன். அதில்ஒன்று, ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பு அரபு மொழியில் ஷேக் அபுஅலிஇக்ன சீனா, ஜக்கரியா ஆகியோர் கைப்பட எழுதிய சுவடுகள்.  ‘‘மொத்தம் 98 பாகங்களில் சுமார்  58,000 பக்கங்கள் எனக்குத் தேவைப்படுகிறது!’’ என்றேன். 

அக்பர் கவுசர்

‘‘நூலகத் தலைவரிடமும் டைரக்டர் ஜென்ரலிடமும் உங்களுடைய கோரிக்கையைத் தெரிவிக்கின்றேன். நாளைக் காலை பதினோறு மணிக்கு வாருங்கள்!’’ என்று பதிலளித்தார் அந்த  அதிகாரி.

அடுத்த நாள் சென்றேன்.  ‘‘உங்களைக் காண்பதற்காக எங்கள் டைரக்டர் ஜெனரல் அவருடைய அறையில் காத்துக் கொண்டு இருக்கிறார்!’’என்று அதிகாரிகள் சொல்ல, நான் சென்றதும் அவர் எழுந்து நின்று என்னை வரவேற்றார். டைரக்டர் ஜெனரலின் பெயர்  டாக்டர். முகமது காமில்காட்.  அவர் ஒரு நற்சான்றிதழ் வாழ்த்து மடலை எனக்கு வழங்கி நன்றி தெரிவித்தார். இரண்டு பென்டிரைவ்களைக்  கொடுத்து,  ‘‘நீங்கள் கேட்ட அனைத்து புத்தகங்களும் இந்த பென் ட்ரைவ்களில் உள்ளன. உங்கள் மொழியில் மொழி பெயர்த்து, நோயால் வாடும் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்!’’என்று அறிவுரை வழங்கினார். கூடவே அவர் சொன்னார்:  ‘‘நம் நூலக நிறுவனர், தலைவர்  ஷேக் ஜுமா அல் மாஜித் அவர்கள் உங்களுக்குத் தம் சலாமைச் சொன்னார்கள். வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் புனித ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. அவருடைய தோட்டத்தில் விளைந்த பேரிட்சைப் பழங்களை உங்களுக்கு ரம்ஜான் அன்பளிப்பாக அனுப்பி உள்ளார்கள். உலக மக்களுக்காக உங்களைத்  ‘துவா’ செய்யச் சொன்னார்கள்!’’என்றார்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், சுமார் இரண்டாயிரம் கிலோ கிராம் எடை கொண்டதுமான மருத்துவ நூல்களை ஸ்கேனிங் செய்த 20 கிராம் எடை கொண்ட இரண்டு பென்டிரைவில் உள்ள நூல்கள் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் நோய்களைத் தீர்க்க உதவ இருக்கிறது என்கிற மகிழ்ச்சி என் நெஞ்சை நிறைத்திருக்க, அதோடு மட்டுமல்ல என்று நூலகத் தலைவர் ஷேக் ஜுமா அல் மாஜித் அவர்களின் தோட்டத்தில் விளைந்த 20 கிலோ பேரிட்சைப் பழங்களையும் நூலக டைரக்டர் ஜெனரல் மூலம்  பரிசாக எங்களுக்கு வழங்கப்பட்டது.

மிகுந்த நெகிழ்ச்சியுடன் நாங்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டுதுபாய்நாட்டுஅரசுமரியாதையுடன்தமிழகத்திற்குத் திரும்பினோம்.’’- இவ்வாறு வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுசர் தம் அனுபவங்களை நம்மிடம் விவரித்து முடித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை