மகாராஷ்டிரா மாநில பாடப் புத்தகத்தில், புதுக்கோட்டை மாணவி பற்றிய சாதனை பாடம்! குவியும் பாராட்டுக்கள்!

 
ஜெயலட்சுமி

மகாராஷ்டிர மாநில பாடத்திட்டத்தில், புதுக்கோட்டை மாணவி பற்றிய பாடம், மாணவர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த எந்த அலட்டலும் இல்லாமல், மீண்டும் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் மாணவி ஜெயலட்சுமி.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனங்கோட்டை திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி. மாணவி ஜெயலட்சுமி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த போதுதான் இந்த சாதனையை  புரிந்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு ஜெயலட்சுமி, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது நடந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற ஜெயலட்சுமிக்கு யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அது அவருக்கு உலகின் மிகவும் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு செல்லும் வாய்ப்பு தான்.

ஜெயலட்சுமி

ஆனால் அதற்கு தேவையான பயண தொகை மாணவியிடம் இல்லாமல் போனது. சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில் நிதி தேவைப்பட்ட நிலையில், அவரை ஊக்குவிக்கும் வகையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலரும் தங்களால் இயன்ற நிதியை வாரி வழங்கினர். இதனால் தேவைக்கு அதிகமாகவே நிதி சேர்ந்து விட்டது. நாசா செல்ல பணம் சேர்ந்த பின்னர், திருச்சியில் இயங்கி வரும் கிராமாலயா தொண்டு நிறுவனத்தினர் மாணவி ஜெயலட்சுமியை சந்தித்து, பயண செலவு முழுவதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாக உதவ முன் வந்தனர். ஆனால் தனக்கு பணம் சேர்ந்து விட்டது என்று கூறி அந்த உதவியை நேர்மையுடன் மாணவி ஜெயலட்சுமி ஏற்க மறுத்து விட்டார்.

அதே சமயம், உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்த உதவி போய் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று மாணவி ஜெயலட்சுமி கருத்து தெரிவித்தார். கழிப்பறை வசதி இல்லாதவர்களுக்கு செய்து தர கோரிக்கையும் வைத்தார். இதனால் மகிழ்ந்து போன தொண்டு நிறுவனம் மாணவியின் கோரிக்கையை ஏற்றது. அதன் பின்னர்,  முந்திரி காய்களை வாங்கி வந்து சாலையோரம் விற்பனை செய்யும் திருவள்ளுவர் நகர் பகுதி மக்களுக்கு கழிவறை கட்டிக்கொடுக்க சம்மதம் தெரிவித்தது. அதன்படி ஒரு கழிப்பறைக்கு 20 ஆயிரம் ரூபாய் என்ற முறையில் சுமார் 126 கழிப்பறைகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடித்த தொண்டு நிறுவனம் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்களிடையே மாணவி ஜெயலட்சுமி பிரபலமானார். அந்த பகுதி பொதுமக்கள், மாணவி ஜெயலட்சுமிக்கு அவர்கள் நன்றி கூறினர். இதை தொடர்ந்து சிறுமி ஜெயலட்சுமிக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. 

ஜெயலட்சுமி
இந்நிலையில் தான்,  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாடப் புத்தகங்களில் மாணவி ஜெயலட்சுமி குறித்த செய்தியும், மாணவர்களுக்கு பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், 7ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் ‘கனவு மெய்ப்படும்’ என்ற தலைப்பில் சிவா என்பவர் 4 பக்கத்தில் எழுதியுள்ள ஜெயலட்சுமி குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது. சமூக சேவை மூலம் பலரின் மனதில் இடம் பிடித்த சிறுமி ஜெயலட்சுமி தற்போது 7ம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது அனைத்து தரப்பினர் மத்தியில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web