வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இலங்கை கடலோரத்துக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என கூறப்பட்டுள்ளது.

இதன் தாக்கமாக நாளை கடலோர தமிழகத்தில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையுடன் இடி, மின்னல் ஏற்படும். மேலும் 17, 18 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில், உள் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை தொடரும். 19 முதல் 21ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் இடையிடையே மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை வாய்ப்பு நிலவுகிறது.
நாளை (16ம் தேதி) கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், 18ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை தீவிரம் அதிகரிக்கும். 19ம் தேதி கோவை மலைப்பகுதிகளிலும், நீலகிரியிலும் கனமழை வாய்ப்பு உள்ளது.
கடலோரப் பகுதிகளில் நாளையும் நாளை மறுநாளும் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அதிகபட்சமாக 8 செ.மீ., ஊத்து, ராதாபுரம், காயல்பட்டினத்தில் தலா 7 செ.மீ., நாலுமுக்கு, காக்காச்சி, குலசேகரப்பட்டினத்தில் தலா 6 செ.மீ., ஸ்ரீவைகுண்டம் மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவு செய்யப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
