புத்தம் புதுப் பொலிவுடன் அண்ணா மேம்பாலம்... முதல்வர் திறந்து வைப்பு!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட முதல் சாலை மேம்பாலம் அண்ணா மேம்பாலம். 1970ல் அப்போதைய சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த அந்தப் பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை சாலை, ஜி.என்.ஷெட்டி சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் இந்த போக்குவரத்து நெரிசலை நீக்கவும், சொகுசு பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது.

அப்போது ரூ.66 லட்சம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட பாலத்தை, 1973 ஜூலை 1ம் தேதி கருணாநிதி திறந்து வைத்தார். சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுமே கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சாலை சந்திப்பில் முதன் முதலாகக் கட்டப்பட்ட மேம்பாலம் இது. ஜெமினி ஸ்டுடியோ அப்பகுதியில் அமைந்திருந்ததால் "ஜெமினி மேம்பாலம்" என்று கூறப்பட்டது. ஆனால், அன்றைய நிலையில் நாட்டிலேயே 3வது பெரிய மேம்பாலமான அதற்கு “அண்ணா மேம்பாலம்" என கருணாநிதி பெயர் சூட்டினார்.
இந்நிலையில், அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா காணும் நிலையில் அதை புதுப்பிக்க அரசின் சார்பில் ரூ.8.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் ஆயிரம் விளக்கு உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி பெறப்பட்டு, ரூ.10.85 கோடியில் அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகள் ஒளிர அழகு படுத்தப்பட்டுள்ளது.

இதில் பாலத்தின் தூண்கள் GRC பேனல்கள் கொண்டு மறுசீரமைக்கப்பு செய்யப்பட்டுள்ளன. பாலத்தின் கீழ் அழகூட்டும் வகையில் பசுமையான செடிகள் ஒளிரும் மின்விளக்குகள், மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை, செயற்கை நீருற்று ஆகியவை அமைக்கப்பட்டன. பாலத்தின் முகப்பில் உள்ள தூண்கள், பூங்கா பகுதியில் யாழி சிற்பங்கள், முக்கோண ஸ்தூபிகள், பித்தளைப் பலகையில் பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் ஆகியவை பொறிக்கப்பட்டு ஒளிர்கிறது.
பொன்விழா ஆண்டை முன்னிட்டு புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டு இருக்கும் அண்ணா மேம்பாலத்தை நேற்று ஆகஸ்ட் 2ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன்,பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நெடுஞ்சாலைத்துறை செயலர் ஆர். செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
