இந்தியத் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது ...அப்பாவு குற்றச்சாட்டு!
திருநெல்வேலியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது என குற்றம் சாட்டினார். “பல ஆண்டுகளாக வாக்களித்து வரும் ஒருவரை, புதிய படிவம் நிரப்பி மீண்டும் பதிவு செய்யச் சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. இது வாக்காளர் உரிமையை அவமதிக்கும் செயல். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும்,” என்று அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் கூறிய கருத்தைத் தீவிரமாக விமர்சித்த அவர், “முதல்வர் ஸ்டாலின் குறுகிய மனப்பான்மையுடன் நடக்கிறார் எனக் கூறியுள்ளார். ஆனால், 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்து மக்களுக்கு ஆறுதல் கூறியவர் முதல்வர் தான். கொடூர எண்ணம் இருந்திருந்தால் குற்றவாளிகளை சிறையில் அடைத்திருப்பார். ஆனால் மனிதநேயத்தோடு நடந்தார்,” என்றார். மேலும், “முதல்வருக்கு தைரியம் இருந்தால் விஜய்யை கைது செய்திருப்பார் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படிச் செய்திருந்தால் 2026ல் புரட்சியே வெடித்திருக்கும்,” என்றும் அவர் கூறினார்.
புதிய அரசியல் கட்சிகள் குறித்து பேசும்போது, “முன்னரும் நடிகர்கள் கட்சிகள் தொடங்கி தோல்வியடைந்தனர். அந்த வரலாற்றுப் பட்டியலில் 11வது இடம் விஜய்க்கு சேரும்,” என அப்பாவு விமர்சித்தார். வரவிருக்கும் தேர்தல் குறித்து அவர், “2026ல் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. திமுக தலைமையில் இதுவரை எந்தத் தேர்தலிலும் தோல்வி ஏற்படவில்லை,” என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
