பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு... சொந்த நாட்டின் மீது 8 குண்டுகளை வீசிய பாகிஸ்தான்?!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீது அந்நாட்டு விமானப் படை நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் பெயரில் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தில் நேற்று அதிகாலை பாகிஸ்தான் போர் விமானங்கள் திடீரென அடுத்தடுத்து 8 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்கிறது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சொந்த நாட்டின் மீதே பாகிஸ்தான் விமானப்படை குண்டு வீசி நடத்திய இந்த தாக்குதலுக்கு அந்தப் பிராந்தியம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கைபர் பக்துன்கவா மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்களில் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகள் குறித்து ராணுவம் அலட்சியம் செய்வதாக ஆம்னெஸ்டி இன்டெர்நேஷனல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து கைபர் பக்துன்கவா போலீசாஸார் கூறுகையில், 'இந்த மாகாணத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 605 தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பொதுமக்கள் 138 பேரும் 79 போலீஸாரும் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 129 சம்பவங்களில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பலர் இறந்துள்ளனர்'' என்று தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
