ஆந்திராவுக்கு 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து ஆந்திராவுக்கு 2 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் அப்பகுதியில் கடந்த சில நாள்களாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள அந்த குடோனில் இருந்து நேற்று புறப்படத் தயாராக இருந்த சரக்கு வாகனத்தை, போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து 2 டன் எடை ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், கோவில்பட்டி ஊருணி தெருவை சேர்ந்த லூக்கா ஆச்சார்யா மகன் முத்துமாரியப்பன் (32), தயாளபாண்டி மகன் சிவசங்கர் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை ஆந்திராவுக்கு கடத்திச் செல்ல இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், ரேஷன் அரிசி மூட்டைகள் ஆகியவற்றை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
