உஷார்... அதிக நேரம் செல்போன் ஸ்கிரீன் பார்ப்பதால் இதயத்திற்கு பாதிப்பு.. மருத்துவர்கள் எச்சரிக்கை!
அதிக நேரம் செல்போன் திரையைப் பார்ப்பதும், இரவு நண்பர்களுடன் செல்போனில் அரட்டையடித்துக் கொண்டிருப்பதும், வாட்ஸ்-அப்பில் சாட்டிங், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஸ்க்ரோலிங் விஷயங்களால் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து நேரிடும் வாய்ப்பு அதிகமாகிறது என்று இருதயநோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காலை முதல் இரவு வரை செல்போன் உள்ளிட்ட திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நமது வாழ்க்கை முறை மாறி வருகிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதில் துவங்கி பாப் கலாச்சாரத்தை வடிவமைக்கும் சமீபத்திய நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வரை, உலகில் நடக்கும் அனைத்தையும் தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகத் தோன்றினாலும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கேஜெட்டுகள் எல்லா நேரங்களிலும் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அப்படி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது உலகம் உங்கள் விரல் நுனியில் இருப்பது போல் உணர வைக்கலாம். ஆனால் அவை மெதுவாகவும் மறைமுகமாகவும் உங்கள் வாழ்க்கையையும், ஆயுளையும் திருடுவதற்கும் காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.

அப்படி செல்போன் பயன்படுத்துவதால் உங்கள் சோர்வடைந்த கண்களை புத்துணர்ச்சியாக்கவும், ஸ்கிரீன் சோர்வைக் குறைக்கவும் உதவும் 5 குறிப்புகளை இதயநோய் மருத்துவர் பகிர்ந்து கொள்கிறார்.
தானேயில் உள்ள ஹாரிசன் பிரைம் மருத்துவமனையின் ஆலோசகர் மற்றும் இருதயநோய் நிபுணர் டாக்டர் சுஹைல் தன்சே, நீண்ட நேரம் ஸ்மார்போன்கள் உள்ளிட்ட திரை பார்ப்பது பல ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு வழிவகுக்கிறது என்று எச்சரிக்கை செய்கிறார். இந்த பழக்கம் உங்கள் இதய ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று பகிர்ந்து கொள்கிறார். அவர் சில பழக்கங்களை, இதயத்தின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கிறார்.
"நீண்ட நேரம் திரையைப் பார்ப்பது பெரும்பாலும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, இரவு நேர செல்போன் பயன்பாடு, படுத்துக் கொண்டே நீண்ட நேரம் செல்போன் திரையை மங்கலான இரவு வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற செயல்கள் அனைத்துமே கடுமையான இருதய அபாயங்களுக்கு வழிவகுக்கும்" என்கிறார்.

நீண்ட நேரம் செல்போன் திரைகளைப் பார்ப்பதன் சில அறிகுறிகளை நீங்கள் சாதாரண சோர்வு என்று நிராகரித்து விடலாம். ஆனால் பெரும்பாலும் அவை உண்மையில் தீவிரமான பாதிப்புகள் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்க என்று டாக்டர் தான்சே விளக்கமளித்துள்ளார். "சோர்வு, தலைவலி, தூக்கமின்மை, படபடப்பு மற்றும் விவரிக்க முடியாத பதட்டம் ஆகியவை இதய பாதிப்புகளின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். இரவில் நீல ஒளியை தொடர்ந்து வெளிப்படுத்துவது உங்கள் உடல் கடிகாரத்தை சீர்குலைத்து, உயர் இரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு நோயை மோசமாக்குகிறது, இவை ஒவ்வொன்றும் இதய நோய்க்கான அறியப்பட்ட ஆபத்து காரணிகளாகும்" என்று அலாரம் எழுப்புகிறார்.
இதயம் சார்ந்த ஆபத்துகள்:
உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பன்முக தாக்கத்தை அதிக நேரம் செல்போன் திரையைப் பார்ப்பது ஏற்படுத்துகிறது. குனிந்த நிலையில் இருப்பதால் ஏற்படும் கழுத்து வலியாக இருந்தாலும் சரி தொடர்ந்து ஸ்க்ரோலிங் செய்வதால் ஏற்படும் மணிக்கட்டு இறுக்கமாக இருந்தாலும் சரி சில கடுமையான இருதய அபாயங்களும் இவற்றால் ஏற்படுகின்றன.
"நீண்ட நேரம் செயலற்ற நிலையில் இருப்பது இரத்த ஓட்டத்தைக் குறைத்து, நரம்புகளில் ஆழமான கட்டிகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஒரு உட்கார்ந்த வாழ்க்கை முறை உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமனுக்கு பங்களிக்கிறது, இவை அனைத்தும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வலுவான காரணிகளாகும். அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் திரையை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான தூக்கம் ஆகியவை எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களில் ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை தூண்டும்" என்கிறார் டாக்டர் தான்சே.
பல ஆய்வுகளின் அடிப்படையில் திரைகளில் 4 முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுபவர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறி உருவாகும் ஆபத்து அதிகம் இருப்பதாகவும், இது கரோனரி தமனி நோய்க்கான வாய்ப்பை நேரடியாக அதிகரிக்கிறது என்கிறார்.

எப்படி தடுப்பது?
உங்கள் இதயத்தைப் பாதுகாக்க, தடுப்பு நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் எளிமையானவை. "ஒவ்வொரு 30-40 நிமிடங்களுக்கும் குறுகிய இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தூக்க சுழற்சியைப் பாதுகாக்க படுக்கைக்குச் செல்வதற்கு முன் தொலைக்காட்சி, செல்போன் உட்பட அனைத்து திரைப் பயன்பாடுகளையும் கட்டுப்படுத்துங்கள். வெளிப்புற உடல் செயல்பாடு, சீரான உணவு மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்" என்று மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
இயக்கம், ஓய்வு மற்றும் சமநிலையுடன் சிறப்பாகச் செயல்படுதல், தொழில்நுட்பத்துடன் இணைந்திருப்பதை தேவையான அளவோடு நிறுத்திக் கொள்வது என்று நல்ல இதய ஆரோக்கியத்திற்கான அறிவுரையாக டாக்டர் தன்சே பரிந்துரைக்கிறார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
