ரூ.241 கோடி செலவில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள்... திட்டத்தை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாடு முழுவதும் 2025–2026 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் அரசு திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதற்கான அடையாளமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற விழாவில் 1,448 மாணவ, மாணவியருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிதிவண்டிகளை வழங்கினார்.
மாணவர்கள் பள்ளிக்கு சிரமமின்றி சென்று வர உதவுவதுடன் மேல்நிலைக் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருமான வரம்பின்றி ஆண்டுதோறும் மிதிவண்டி வழங்கும் திட்டம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 1,092 கோடி ரூபாயில் 22 லட்சம் மாணவ–மாணவியர் மிதிவண்டிகள் பெற்றுள்ளனர். இந்த ஆண்டில் 2,38,967 மாணவர்கள் மற்றும் 2,95,050 மாணவியர் என மொத்தம் 5,34,017 பேருக்கு ரூ.241 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 11,449 மாணவர்களுக்கு ரூ.5.18 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில் 8 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் தினத்தையொட்டி பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல், பல்வேறு நடனங்கள் மற்றும் மாணவி உரை போன்ற கலாநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவர்களை துணை முதலமைச்சர் பாராட்டி கேடயங்களை வழங்கினார்.

மேலும், மாநிலம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், 2024–25 கல்வியாண்டின் சிறந்த 114 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
