நாளை தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம்... முதல்வர் அறிவிப்பு!
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடிப் போராட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி நாளை (ஏப்ரல் 16) தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றி அமைப்பது தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று அநீதி என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தச் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால் தென் மாநில மக்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் பெருமளவு குறையும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளையும் மக்களின் குரலையும் ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதால் இந்த ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒன்றிய அரசின் இந்த முடிவுக்குத் தமிழகத்தின் குரலுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. நாளை நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
