ஆயுத பூஜை கொண்டாட்டம்... பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்!
நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க நேற்று சென்னையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சென்னையில் கோயம்பேடு சந்தை, பாரிமுனை பூக்கடை பஜார், மயிலாப்பூர் சன்னதி தெருக்கள், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் தானா தெரு உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை படுஜோராக நேற்று நடந்தது.

சிறிய வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.40க்கும், பெரிய வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.80-க்கும், 1 பக்கா பொரி ரூ.40-க்கும், 1 கிலோ அவல் ரூ.100-க்கும், பொட்டு கடலை 1 கிலோ ரூ.120-க்கும், நாட்டு சர்க்கரை கிலோ ரூ.75-க்கும், திருஷ்டி பூசணிக்காய் பெரியது ரூ.80-க்கும், சிறியது ரூ.40-க்கும் விற்பனையானது. 1 டஜன் வாழைப்பழங்கள் தரத்திற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. வாழைத்தார் ரூ.450-ல் இருந்து விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டை விட பூக்களின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. செவ்வந்திப்பூ ஒரு முழம் ரூ.60-க்கும், கதம்பம் ஒரு முழம் ரூ.50-க்கும், மல்லிகை பூ ஒரு முழம் ரூ.60-க்கும், முல்லை பூ ஒரு முழம் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.100-ல் இருந்து 160-க்கும், மாதுளை பழம் கிலோ 160-க்கும், ஆரஞ்சு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.150 வரையிலும், சாத்துக்குடி, பன்னீர் திராட்சை ஆகியவை தலா கிலோ ரூ.100-க்கும், பச்சை திராட்சை கிலோ ரூ.160-க்கும், அன்னாசி பழம் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. எலுமிச்சை பழம் ஒன்று ரூ.4-க்கும், ஒரு தேங்காய் ரூ.25-ல் இருந்து ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் அலங்கார பொருட்களின் விற்பனையும் படுஜோராகவே நடந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
