கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு... என்ன நடந்தது? முழு விபரம்!
கோவை நகரை அதிர்ச்சியடைய வைத்த மாணவி வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கும்பலை போலீசார் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுப்பிடித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் தனியார் கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். விடுதியில் தங்கி வரும் மாணவி, சமூக வலைத்தளத்தில் பழகிய வாலிபருடன் காதலில் இருந்தார். கடந்த விடுமுறை நாளில் இருவரும் காரில் வெளியில் சென்றபோது, கோவை விமான நிலையம் பின்புறம் மனிதர் நடமாட்டம் குறைந்த பகுதியில் நிறுத்தி பேசியுள்ளனர்.

அப்போது மொபட்டில் வந்த மூவர் குழு காரை சுற்றி வளைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. கதவைத் திறக்கவில்லை என்பதால் அரிவாளால் கண்ணாடி உடைத்து, காதலனைத் தாக்கினர். காதலனின் தலையில் காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில், மாணவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர். பின்னர் புதர் பகுதிக்குள் அழைத்து சென்று கொடூரமாக தாக்கி, ஒருவர் பின்பொருவர் என கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மயக்கம் தெளிந்த மாணவியின் காதலன் போலீசாருக்கு தகவல் அளித்தார். பீளமேடு போலீசார், மாணவியை புதர் இடத்தில் நிர்வாண நிலையில் கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்துக்கு பிறகு விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் மூன்று பேர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்த போது, கும்பலில் இருந்த ஒருவர் தலைமை காவலர் சந்திரசேகரை கத்தியால் காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி, தவசி, சதீஷ், கார்த்திக் ஆகிய மூன்று பேரையும் காயப்படுத்தி பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில், காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகருடன் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்து வருகின்றனர். கோவைப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
