பரபரப்பு... ரயிலில் கற்கள் வீசி கல்லூரி மாணவர்கள் மோதல்...!!

சென்னை பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி கொண்டு ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மின்சார ரயில் புறநகர் பகுதியில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தனர். ரயில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் வந்தடைந்தபோது ரயிலில் பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரயிலில் இருந்து கீழே இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருந்த ரயில் பெட்டி மீது கற்களை வீசி எறிந்தனர்.
பதிலுக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் கற்களை வீசி எறிந்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 40க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் நடைப்பாதையில் ஓடிச் சென்று தொடர்ந்து கற்களை வீசி எறிந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். பயணிகளில் சிலர் மின்சார ரயிலில் இருந்த கதவுகளை மூட முயற்சி செய்தனர். ஆனால் கதவுகளை மூட முடியாததால் ரயில் பெட்டிக்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.
இதில் கல்லூரி மாணவர்கள் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பயணிகள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த ரயில்வே போலீஸார் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க முயன்றபோது அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அக்டோபர் 5ம் தேதி கடற்கரை ரயில் நிலையத்தில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்ட சம்பவத்தின் சுவடு மாறவில்லை. அதற்குள் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் மீண்டும் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...