கச்சா எண்ணெய் விலை உயர்வு... பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர வாய்ப்பு?
சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. ஒரு கட்டத்தில் பீப்பாய் 120 டாலர் வரை உயர்ந்த எண்ணெய் விலையால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக 'மெக்வாரி' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 18 ரூபாயும், டீசல் விற்பனையில் 35 ரூபாய் வரையும் இழப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி 2400 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்த நிலையில், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்ததன் மூலம் அந்த இழப்பு ஓரளவுக்குச் சரிசெய்யப்பட்டது. இருப்பினும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தையே பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களைக் கடந்து நீடிப்பதால் நிறுவனங்களின் லாபம் முற்றிலுமாகக் கரைந்து போயுள்ளதாக நிதி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இதற்கிடையே மே முதல் வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தமிழக காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் எச்சரித்துள்ளார். மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட தேர்தல் முடிந்தவுடன் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தற்போதே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
