தேவர் குருபூஜை.. பசும்பொன்னில் பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்... வாகன நுழைவுக்கு கடும் கட்டுப்பாடு!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா இன்று நடைபெறுகின்ற நிலையில் ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் நடைபெறும் விழாவை முன்னிட்டு 10,000க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடை உத்தரவு அமலில் உள்ளதால், காவல்துறை அனுமதி பெற்ற வாகனங்கள் தவிர, பிற தனியார், வாடகை மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களும் பசும்பொன் வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. பயணிகளின் வசதிக்காக மாற்றுப்பாதையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வாகனங்களில் தொங்குதல், கூரையில் அமர்தல், வெடி வெடிப்பது போன்ற செயல்கள் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கையாக 38 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்காக 300 உடை கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. பசும்பொன், கமுதி பகுதிகளில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்திலும் விழா நாளை காலை நடைபெறவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். இதனைத் தொடர்ந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையொட்டி மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ட்ரோன் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
