“செல்போன் தராதீங்க..” கதறியழுத தந்தை... லண்டன் மாணவி கோவையில் காதலனுடன் திருமணம்!
லண்டனில் மேல்படிப்பு படித்து வந்த இளம்பெண் ஒருவர், நெல்லையைச் சேர்ந்த தனது காதலனுடன் கோவையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் இசக்கி பாண்டி, வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும், பெண்ணின் குடும்பத்தினர் இக்காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பெண்ணை மேல்படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இருவரும் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் பெண்ணுக்கு வீட்டில் வேறு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த இசக்கி பாண்டி, தனது காதலியை இந்தியா வரவழைத்து கோவையில் உள்ள சவுதேஸ்வரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தை கோவையில் பதிவு செய்ய முயன்ற போது, பெண்ணின் உறவினர்கள் அங்கு திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி கோவை மாநகர காவல் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தனர். கோவை போலீசார் பாதுகாப்புடன் இருவரையும் அவர்களின் சொந்த ஊரான நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று நெல்லையில் திருமணத்தை பதிவு செய்ய இசக்கி பாண்டி தரப்பினர் முயன்றபோது, பெண்ணின் குடும்பத்தினருக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது மோதலாக மாறி, இசக்கி பாண்டியின் தந்தை செல்வம் மற்றும் சித்தப்பா மணிகண்டன் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் பெற்றோர் கூறுகையில், “எங்கள் மகளுக்கு 18 வயது முடிந்து மூன்று நாட்கள்தான் ஆனது. அப்போதுதான் அவளை இந்தியா வரவழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீர்கள். அதுவே இப்படியான விபரீதங்களுக்கு காரணம்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
