“துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்” - சீமான் பேட்டி!
அனுபவமும், கட்சிக்கு விசுவாசமாகவும் உள்ள துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடையே பேசுகையில் தெரிவித்தார்.
இன்று நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து திருச்சி வந்திருந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொருளாதார வலிமை இல்லாத நிலையில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக படையைப் பெருக்கி கட்சியை மேலும் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பழனியில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது தீர்மானங்களே அல்ல. தமிழ் வளர்ப்பதாக சொல்லிக் கொண்டு வடமொழி சொற்கள் புழக்கம் அதிகரித்திருக்கிறது. வாக்கு அரசியலுக்காக ஏதேதோ செய்கிறார்கள்.
கன்னியாகுமரி, தென்காசி, விக்கிரவாண்டி என எங்கு குற்றம் நடந்தாலும் சம்பந்தபட்ட மாவட்டத்தில் வழக்குப் போடாமல் திருச்சிக்கு அழைத்து வந்து வழக்குப் போட்டு கைது செய்கிறார்கள். திருச்சி எஸ்.பி., தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். நான் அவரைப்போல் ஊதியத்துக்காக பணி செய்யாமல், கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறேன்.
டி.என்.பி.எஸ்.சி தலைவராக பிரபாகரை நியமித்தது எப்படி? பிரபாகர் கோவையில் நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக களத்தில் பணியாற்றியவர். பாஜகவுக்கு பணியாற்றியதற்கு கொடுத்த பரிசா டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி? மாநிலத்தை ஆள்வது திமுகவா? பாஜகவா? திமுகவும், பாஜகவும் ஒரே கட்சிதான். இவர்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்?
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி உண்டா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்கும். தனித்து முடிவெடுக்கும் ஆற்றல் விஜய்க்கு உள்ளது. அது குறித்து தம்பி விஜய் தான் முடிவு செய்து அறிவிக்க வேண்டும். ஒரு தம்பிக்கு அண்ணன் சொல்ல வேண்டியதை நான் விஜயிடம் தெரிவித்துள்ளேன். அது குறித்து பொதுவெளியில் கூறுவது சரியாக இருக்காது.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன். தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்ததாகவும், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாகவும் தொழில்துறை அமைச்சர் கூறுகிறார். இது நம்பும்படி உள்ளதா? அப்படி நடந்ததற்கான அறிகுறி ஏதும் தெரிகிறதா? போகிறபோக்கில் பொய் சொல்லி விட்டுப் போகிறார்கள். உண்மையைப் பேசுங்கள்.
மிகவும் அனுபவம் வாய்ந்த, கட்சிக்கு விசுவாசமான நபரான துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம். இது மூத்த தலைவரான துரைமுருகனுக்கு கொடுக்கும் அங்கீகாரமாக இருக்கும்” என்று கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!