மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: தோட்ட உரிமையாளர் மீது வனத்துறை வழக்கு!

 
யானை

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தோட்ட உரிமையாளர்மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லாறு மற்றும் ஜக்கனாரி பகுதிகள் யானைகள் வழித்தடமாகப் பெயர்பெற்றவை. இங்கு பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியும், நீலகிரி அடிவார வனப்பகுதியும் இருப்பதால் அடிக்கடி யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலங்களுக்கு வரும் நிலை நீடிக்கிறது.

யானை

இந்நிலையிலேயே ஜக்கனாரி பகுதியில் திருமலை ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 15 வயதான ஆண் யானை அகழியில் அமர்ந்த நிலையில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் யானை நெஞ்சழுத்தத்தால் உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், உடல் அருகே மின்வேலி இருந்ததால் வனத்துறை அதிகாரிகள் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

அதில், யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. மின்வேலியின் கம்பியில் யானையின் தும்பிக்கை மற்றும் தோல் பகுதிகளில் கருகிய சுவடுகள் தென்பட்டதாக அறிக்கை கூறுகிறது. மேலும், அந்த மின்வேலிக்கு பேட்டரி மூலம் அல்லாது நேரடியாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருந்தது என விசாரணையில் தெரியவந்தது.

யானை

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் தோட்ட உரிமையாளர் திருமலை ராஜ் மீது வனச்சட்டப்படி வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் உடல்நலக் குறைவு காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?