வெடிக்கும் துப்பாக்கிகள்... உணவு, தண்ணீரின்றி தவித்தோம்.. வங்கதேசத்திலிருந்து திரும்பிய மாணவிகள் பேட்டி!

 
வங்கதேசம் வங்காளதேசம்
வங்கதேசத்தில் இன்னமும் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் வெடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி சத்தத்தில், உணவு கிடைக்காமல், செல்போன் டவர் இல்லாமல் தொடர்பு கொள்ள வழி தெரியாமல்  கலவர அச்சத்தில் இருந்த எங்களை பாதுகாப்பாக மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என கிருஷ்ணகிரி மாணவிகள் தெரிவித்தனர்.

வங்கதேசத்தில்,  கல்வி, வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலவரம் வெடித்து, 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு படித்து வந்த இந்திய மாணவ, மாணவிகளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு வருகிறது. 

அதன்படி,  வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த, 49 மாணவ, மாணவிகள் நேற்று முன் தினம் பாதுகாப்பாக ஊருக்கு திரும்பினர். இதில் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரை சேர்ந்த பயிற்சி மருத்துவர் ப்ரீதா வாசுதேவன்(25), இறுதியாண்டு மாணவிகளான ஸ்ரீநிதி ராமமூர்த்தி(23)  ஆலப்பட்டி தக்சண்யா ஜேம்ஸ்( 22) உள்பட 12 பேர் வீடு திரும்பினர்.

வங்கதேசம்

இது குறித்து மாணவிகள் செய்தியாளர்களிடம் பேசிய போது, “நாங்கள் அனைவரும் வங்கதேசத்தில் சிலேட் பகுதியில் உள்ள சிலேட் மகளிர் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறோம். இதில், சிலர் மருத்துவம் முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராகவும் உள்ளனர். எங்கள் கல்லூரியில் மட்டும் இந்தியாவை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஜூலை 17-ம் தேதி வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்ட செய்தி பரவியது. இதன் விவரங்கள், கலவரங்கள் குறித்து முழுமையாக அறிவதற்குள் இணையதளம், செல்போன் உள்ளிட்ட தொலை தொடர்புகள் முற்றிலும் முடங்கியது. நாங்கள் தங்கியிருந்த விடுதியில் உணவு கூட வழங்கப்படவில்லை.  

கடந்த 2 நாட்கள் முன்பு,  துப்பாக்கி சத்தம் மற்றும் கலவர வீடியோக்களை பார்த்து கலவரம் தீவிரமடைந்ததை தெரிந்து கொண்டோம். எங்கள் பெற்றோரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கள் விடுதியில் இருந்த மாணவி தக்சண்யாவின் செல்போனில் மட்டும் அதிர்ஷ்டவசமாக டவர் கிடைத்தது. அந்த செல்போன் மூலம், 60 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் பேசி தகவல் தெரிவித்தனர். மேலும், தொலைக்காட்சியில் வெளியான உதவி எண்ணை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவு தூதரக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் உடனடியாக எங்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பெயர், விவரங்களை மட்டும் கேட்டனர். அதன் பின் தமிழக அரசு உதவியோடு, எங்களது பாஸ்போர்ட் விவரங்கள் முதல் விமான டிக்கெட் வரை அவர்களே ஏற்பாடு செய்தனர்.  

வங்கதேசம் வன்முறை

கடந்த 20-ம் தேதி மதியம் 3 மணியளவில் சிலேட் பகுதியில் இருந்து கிளம்பிய நாங்கள், சிலாங், தமாபில், தவுகி எல்லை வழியாக கவுஹாத்திக்கு ராணுவ பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டோம். அதன் பின்னர் கவுஹாத்தியில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய நாங்கள் சென்னை வந்தடைந்தோம். எங்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். 3 நாட்கள் துப்பாக்கி சத்தம், கலவர அச்சத்தில் சிக்கி இருந்த எங்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றனர். 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web