தமிழகம் முழுவதும் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்.. நிலம், குடியிருப்புக்கள் விலை உயர்வு?!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் நிலம் மற்றும் குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது.குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு குறித்து சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரஅடியிலும் நிர்ணயிக்கப்படுகிறது.
இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பைவிட மிகமிகக் குறைவாகவே உள்ளன.வங்கிகள் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் தான் கடன் வழங்கி வருகின்றன. வழிகாட்டி மதிப்பு குறைவாக இருப்பதால் மனை நிலம் வாங்குவோர் வங்கிகளில் தேவையான அளவுக்கு கடன் பெற முடியாத சூழல் நிலவி வருகிறது. இதைத் தவிர்க்கவும் வழிகாட்டியில் குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயிக்கவும் ஆகஸ்ட் 16ம் தேதி மைய மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதத்துக்குப்பின் குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பை பொறுத்தவரை சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.1000, ஆவடி, தாம்பரம், ஓசூர் மற்றம் காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.800, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.700, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், கரூர் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.600, தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.500, கடலூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.400 , நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள மனைகளுக்கு சதுரஅடி ரூ.300, அனைத்து பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு சதுரஅடி ரூ.200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.100ம், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.50, விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ரூ.2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புகள் ஆன்லைனில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய குறைந்தபட்ச மதிப்புக்கு கீழ் வேறு மதிப்புகள் ஏதும் உள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக பதிவுத் துறையானது பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வையை 11 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைத்துள்ளது. அதே நேரத்தில் வழிகாட்டி மதிப்பில் குறைக்கப்பட்டிருந்த 33 சதவீதத்தை மீண்டும் உயர்த்தியது. இதனால், வீடு, நிலம் வாங்குவோருக்கு கூடுதல் செலவுகள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி கட்டிடம் வாங்குபவர்களுக்கான பதிவு விதிகளில் திருத்தம் செய்து, கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவோர் அதன் முழு பரப்புக்கும் கணக்கிட்டு அதனைப் பொறுத்து 9 சதவீதம் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதன் காரணமாக வீடு வாங்குவோர் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த மதிப்புக்கள் உயர்த்தப்பட்டதால் மனைகளின் சந்தை மதிப்பு உயரக்கூடும் என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!