இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்... அஞ்சலி செலுத்துபவர்களுக்கு விதிமுறைகள் வெளியீடு!
இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமுதாய அமைப்பாளர்களுடன் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நினைவு தினத்தன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும், வாடகை வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.
அஞ்சலி செலுத்த செல்பவர்களின் வாகன எண், வாகன பதிவு சான்று, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்களின் விவரங்களை செப்டம்பர் 6ம் தேதிக்கு முன்பாக சம்மந்தப்பட்ட உட்கோட்ட காவல் அலுவலகங்களில் அளித்து வாகன அனுமதி சீட்டு பெற்று கொண்டு, அஞ்சலி செலுத்த செல்லும்போது வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாமல் செல்ல அனுமதி இல்லை.
வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்தி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தாமல் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நினைவிடத்திற்கு செல்ல வேண்டும். வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தியோ மேற்கூரையில் அல்லது படிக்கட்டிலோ பயணித்து செல்ல கூடாது. வாகனங்களில் ஆயுதம் ஏதும் எடுத்து செல்லக்கூடாது. பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!