உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும்... ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி!
உக்ரைனுடன் கடந்த 1992ம் ஆண்டு முதல் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது. அந்த நாடு மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. 2½ ஆண்டுகளை கடந்து நீடித்து வரும் இந்த போர் குறித்து இந்தியா கவலையை வெளியிட்டு வருகிறது.
இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் மோதலுக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் அவர் நேரிலும் வலியுறுத்தி இருந்தார்.இந்த நிலையில் இத்தாலியில் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியை சந்தித்த ஜெலன்ஸ்கி, அவரை உக்ரைன் வருமாறு அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
அதன்படி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த 22-ந் தேதி புறப்பட்டு போலந்து சென்ற அவர், அங்கே 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அந்த பயணத்தை முடித்துக்கொண்டு ‘ரெயில் போர்ஸ் ஒன்’ ரெயில் மூலம் பலத்த பாதுகாப்புடன் அவர் உக்ரைன் புறப்பட்டார். சுமார் 10 மணி நேர பயணத்துக்கு பின் நேற்று காலையில் உக்ரைன் தலைநகர் கீவை அடைந்தார்.
அங்கு அவரை உக்ரைன் துணைப்பிரதமர் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகள் நேரில் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி ஹியாத் ஓட்டலுக்கு சென்றார். அங்கே ஏராளமான இந்தியர்கள் குவிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு உடனடியாக பிரதமர் மோடி கீவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு சென்றார். அங்கே தற்போதைய போரில் கொல்லப்பட்ட 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் நினைவுச்சின்னத்தை அவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்து கொண்டார். அவர் பிரதமர் மோடியை கட்டித்தழுவியும், கைகுலுக்கியும் வரவேற்றார். பின்னர் அங்கே உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். போரில் அப்பாவி குழந்தைகளின் உயிர்கள் பறிக்கப்பட்டதை நினைத்து கலங்கிய பிரதமர் மோடி, நினைவிடத்தில் பொம்மை ஒன்றை வைத்து மரியாதை செலுத்தினார்.
அத்துடன் ஜெலன்ஸ்கியின் தோளில் கை போட்டவாறு அவருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். பின்னர் கீவில் உள்ள ‘அமைதியின் சோலை’ பூங்காவில் நிறுவப்பட்டு உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தனியாகவும், உயர்மட்டக் குழுவினருடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக உக்ரைனில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
அப்போது ஜெலன்ஸ்கியிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த போரில் நாங்கள் (இந்தியா) நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஒருபக்க சார்பாகவே தான் இருக்கிறோம். அது அமைதியின் பக்கம். நாங்கள் புத்தரின் நிலத்தில் இருந்து வந்திருக்கிறோம். அங்கே போருக்கு இடமில்லை.
மகாத்மா காந்தியின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறோம், அவர் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு அமைதியின் செய்தியை வழங்கியவர். தேசங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதை உங்களுக்கும் முழு உலக சமூகத்துக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். அது நமக்கு மிகவும் முக்கியமானது.
சில நாட்களுக்கு முன்பு நான் சமர்கண்டில் அதிபர் புதினை சந்தித்தேன். அப்போது அவரிடம், ‘இது போருக்கான சகாப்தம் அல்ல’ என தெரிவித்தேன். கடந்த மாதம் ரஷ்யா சென்றிருந்தபோது கூட, போர்க்களத்தில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை தெளிவாக கூறினேன். பேச்சுவார்த்தைகள், தூதரக நடவடிக்கைகள் மூலம்தான் இந்த தீர்வு கிடைக்கும். எனவே நேரத்தை வீணடிக்காமல் அதை நோக்கி நாம் நகர வேண்டும்.
எனவே இரு தரப்பும் ஒன்றாக அமர்ந்து பேசி, இந்த நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான வழிகளை காண வேண்டும். உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று இந்திய பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி உக்ரைனுக்கு சென்றதன் மூலம் அந்த நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமாக போரிட்டு வரும் உக்ரைன், நேற்று முன்தினம் முதல் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தை டிரோன்கள் மூலம் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த கடும் தாக்குதலுக்கு மத்தியில் பிரதமரின் உக்ரைன் பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி மற்றும் ஜெலன்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தியா-உக்ரைன் இடையேயான வர்த்தகம், பொருளாதார பிரச்சினைகள், பாதுகாப்பு, மருந்துகள், வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அந்தவகையில் வேளாண்மை மற்றும் உணவுத்துறையில் ஒத்துழைத்தல், மருத்துவ உற்பத்தி பொருட்கள் ஒழுங்கமைப்பு துறையில் ஒத்துழைத்தல், உக்ரைனில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மானிய உதவியை இந்தியா வழங்குதல் மற்றும் 2024-28 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான கலாசார ஒத்துழைப்பு ஆகிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!