கண்ணதாசன், எம்.எஸ்.வி. சகாப்தம்... இரு ஆளுமைகளின் பிறந்த நாள்!
தமிழ் சினிமாவின் சகாப்தங்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் பிறந்த நாள் இன்று.கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா…. கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா” என்ற மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையும், ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடும் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை கேட்டால் மெய் சிலிர்த்துபோகும்… எம்எஸ்வியின் இசையும் கண்ணதாசனின் வரிகளும் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் பல. இவர்களின் கூட்டணியை அமிழ்தும் தேனும் சேர்ந்த கூட்டணி என மலைத்து லயித்து போயினர் இசை ரசிகர்கள்.
பாசமலர் படத்தில் இடம்பெற்ற பாடலைக் கேட்போருக்கு, இசையைக் கவிதை அலங்கரிக்கிறதா, கவிதையை இசை அலங்கரிக்கிறதா என்ற கேள்வி எழும். இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, துன்பங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடப்போருக்கு உத்வேகமாக இருப்பவை எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்கள். தத்துவம்,ஆன்மீகம், காதல்,சோகம், பாசம் என்று எந்த உணர்ச்சியையும் தனது எழுத்தால் உயிர்ப்பிக்க செய்தவர் கண்ணதாசன் என்றால், அதை இசையால் தாலாட்டியவர் எம்.எஸ்.வி.வாராதிருப்பான, ‘உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா, ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, துள்ளுவதோ இளமை, என்ன பார்வை உந்தன் பார்வை, ரோஜாமலரே ராஜகுமாரி, , என மனதோடு தங்கும் பாடல்களை படைத்தனர் இந்த ராஜ குமாரர்கள்.

சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’, ’புதிய பறவை’ திரைப்படத்தில் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ, பெரிய இடத்துப்பெண் திரைப்படத்தில் அன்று வந்ததும் இதே நிலா, காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் விஸ்வநாதன் வேலை வேண்டும், மலரென்ற முகம் ஒன்று’ போன்ற பாடல்களை அடுத்து அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் மட்டுமே ஒலித்து கொண்டிருந்த ஜாஸ் இசையை முதன் முதலாகத் தமிழ் இசை ரசிகர்களின் காதுகளுக்கு கண்ணதாசன் வரிகளோடு விருந்தளித்தார் எம்.எஸ்.வி.
ஏழு ஸ்வரங்களுக்குள் இசையின் அனைத்து அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டிய எம்.எஸ்.வி. மெலடி பாடல்களில் மனதை மயக்கவும், காதல் பாடல்களில் கனிரசம் சொட்டவும் செய்தது தொடர்கதையானது. மேலும், வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும் உண்மையான படைப்புகள் முக்காலத்துக்கும் பொருந்தும் என்பதற்கு உதாரணம் கண்ணதாசன் எழுதிய பாடல்கள்.
சட்டி சுட்டதடா கை விட்டதடா… சொன்னது நீ தானா..., ஓடும் மேகங்களே ... ஒரு சொல் கேளீரோ..., வசந்தத்தில் ஓர் நாள்..., தெய்வம் தந்த வீடு..., பச்சைக்கிளி முத்துச்சரம்…, ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா…, ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.. ’நான் பேச நினைப்பதெல்லாம்…, உள்ளத்தில் நல்ல உள்ளம்… நிலவே என்னிடம் நெருங்காதே..., உள்ளிட்ட பல பாடல்களில் எம் எஸ்வியின் இசையில் லயிப்பதோ அல்லது கண்ணதாசனின் பாடல் வரிகளில் லயிப்பதோ என குழம்ப வைத்தனர் இந்த மாயக்கண்ணன்கள் இருவரும்.

கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா என்று கண்ணதாசன் கேட்டதுபோல் எம்.எஸ்.வி இசையால் கண்ணதாசன் பாடல் இனித்ததா அல்லது கண்ணதாசன் வரிகளால் எம்.எஸ்.வி. இசைக்கு மெருகேறியதா என வியக்காதார் இருக்க முடியாது. வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து என எத்தனையோ கவிஞர்களின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத்தாலும், கண்ணதாசன் பாடல்கள் தனித்துத் தெரிகின்றன.
இளையராஜா, சங்கர்-கணேஷ், கே.வி.மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தாலும், எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்கள் தனித்துவம் பெற்று விளங்கின. எத்தனை இசைக்கலைஞர்கள் வந்தாலும், எத்தனை பாடல்களை கேட்டாலும், இன்றும் என்றும் ரசிக்கக்கூடிய மறக்க முடியாத இசைக்காவியங்களை படைத்த எம்எஸ்வியும் கண்ணதாசனும் தமிழ் திரை இசையின் இரு கண்கள்…
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
