வேலூரில் பரபரப்பு... நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி., ஆஜர்!
திமுக எம்.பி. கதிர் ஆனந்த, கடந்த 2019ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, இன்று வேலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.தமிழகத்தில் கடந்த 2019ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் நேரத்தில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இதன் தொடர்ச்சியாக கதிர் ஆனந்துக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் காட்பாடியை அடுத்துள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் தாமோதரனுக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் இருந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்க இருந்ததாக கூறப்பட்ட ரூ.10.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.10.48 கோடி பணத்துடன் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் புத்தம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த 200 ரூபாய் நோட்டு கட்டுகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக, காட்பாடி காவல் நிலையத்தில் அப்போதைய தேர்தல் கணக்கு அலுவலர் சிலுப்பன் அளித்த புகாரின் பேரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சத்தியகுமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக வேலூர் தொகுதி எம்.பி.யாக உள்ள கதிர் ஆனந்த் இன்று செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜரானார். அப்போது, வழக்கை வரும் அக்டோபர் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் சத்தியகுமார் உத்தரவிட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
