மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம்... 19ம் தேதி முதல் கட்டணச்சீட்டு முன்பதிவு தொடக்கம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது. இதைக் காண வரும் பக்தர்களுக்கான கட்டணச்சீட்டு முன்பதிவு 19ம் தேதி காலை முதல் தொடங்குகிறது. ஆன்லைன் மூலமாகவும் எல்லீஸ் நகரில் உள்ள தங்கும் விடுதியில் நேரடியாகவும் பக்தர்கள் வரும் 22ம் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 200 மற்றும் 500 என இரண்டு வகையான கட்டணச்சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 500 கட்டணச்சீட்டு ஒரு நபருக்கு 2 வரையும், 200 கட்டணச்சீட்டு ஒரு நபருக்கு 3 வரையும் மட்டுமே வழங்கப்படும். இந்த முன்பதிவிற்கு ஆதார் அட்டை மற்றும் அலைபேசி எண் அவசியம் தேவைப்படும். கூடுதல் எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரும் நிலையில் குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு 23ம் தேதி தகவல் தெரிவிக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை உரிய ஆவணங்களைக் காண்பித்துப் பணம் செலுத்தித் தங்களது கட்டணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். திருக்கல்யாணத்தன்று காலை 5 மணி முதல் 7 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பக்தர்கள் அமர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கட்டணமில்லா தரிசனத்திற்கு வருபவர்கள் தெற்கு கோபுரம் வழியாக முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
