இரண்டே நிமிடத்தில் இதய அடைப்புகளை கண்டறியும் புதிய பரிசோதனை... ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அறிமுகம்!
சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதய அடைப்புகளை வெறும் 2 நிமிடங்களில் கண்டறியும் புதிய பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘CT Calcium Scoring’ எனப்படும் இந்த அதிநவீன பரிசோதனை முறை மூலம், ஊசி அல்லது மருந்து தேவையில்லாமல், இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிவு அல்லது அடைப்பு உள்ளதா என்பதை துல்லியமாக அறிய முடிகிறது. ரத்த நாளங்களில் எங்கு, எவ்வளவு அளவிற்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் இது தெளிவாக காட்டுகிறது.

மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாவது, “கடந்த 7 ஆண்டுகளாக ஓமந்தூரார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினசரி சராசரியாக 50க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து வருகின்றனர். மாரடைப்பு மற்றும் இதய நோய் பிரச்சினைகள் அதிகரித்து வருவதால், இந்த புதிய பரிசோதனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் கட்டணம் வெறும் ரூ.500 மட்டுமே. இதே பரிசோதனை தனியார் மருத்துவமனைகளில் ரூ.5,000 வரை வசூலிக்கப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டது.
மாரடைப்பு தற்போது இளம் வயதினரிடமும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதய நோய்களை துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிய உதவும் இந்தப் பரிசோதனை, அரசு மருத்துவமனைகளில் நவீன சிகிச்சை முறைகளுக்கு ஒரு புதிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
