ஸ்டாலின் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது... இபிஎஸ் ஆவேசம்!
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் இலக்குடன் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று காலை, குன்னூர் பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரைநிகழ்த்தினார்.
அந்த உரையில் “தமிழ்நாடு முழுவதும் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் ஏழை மக்களின் எட்டாத அளவுக்கு உயர்ந்துவிட்டன. ஆனால், தி.மு.க. அரசு அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஏழை மக்களை பற்றிக் கவலைப்படாத ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான்,” எனக் கூறியுள்ளார்.

ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் வாகன வருகை கட்டுப்பாடுகள் காரணமாக வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. “அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், இதுகுறித்து நீதிமன்றத்தை நாடி, வியாபாரிகளின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்” என உறுதி அளித்தார்.
“தமிழகத்தில் தற்போது 60000 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 1.5 கோடி பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக அந்தத் துறை அமைச்சரே ஒப்புக்கொண்டார். அதன் மூலம் நாளுக்கு ரூ.15 கோடி வருமானம், மாதத்திற்கு ரூ.450 கோடி, வருடத்திற்கு ரூ.5,400 கோடி வரை வருமானம் உருவாகிறது. கடந்த 4½ ஆண்டுகளில் 22000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது,” என்றார்.
“இந்த தொகை எங்கு செல்கிறது? எவ்வளவு பாட்டில் திரும்பப் பெற்றீர்கள்? எந்த கணக்கிலும் பதிலில்லை. அமைச்சர் தான் இதை ஒப்புக்கொண்டுள்ளார். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், இந்த முறைகேடுகளை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுப்போம்,” என வலியுறுத்தினார்.
“நகராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வை சுரண்டும் ‘கொள்ளை அரசு’ தி.மு.க,” என்றார் பழனிசாமி. “தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் பல பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. 2026-ல் ஆட்சி அமைந்தவுடன், தமிழ்நாட்டை ‘போதை இல்லாத தமிழகம்’ ஆக்குவோம்,” என உறுதி அளித்தார்.

அ.தி.மு.க அலுவலகம் டெல்லியில் உள்ளது என மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி கூறியதைக் குறிப்பிட்டு “அ.தி.மு.க அலுவலகம் சென்னையில்தான் உள்ளது. வந்து பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் ஆள் வைத்து உடைக்க முயற்சித்தீர்கள். ஆனால் நொறுக்க முடியவில்லை. அ.தி.மு.கவை யாராலும் பிளக்க முடியாது,” என கூறினார். “தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, தி.மு.கவிலிருந்து விலகியவர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்ற முயன்றனர். அப்போது அதை பாதுகாத்தது அ.தி.மு.க; அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியது ஜெயலலிதா என்பதையும் மறக்கக்கூடாது,” என்றார். மேலும் “அ.தி.மு.க உழைப்பால் உயர்ந்த கட்சி. எத்தனை சதிகள் நடைபெற்றாலும், எங்களது தொண்டர்கள் மட்டுமே கட்சியை தாங்கி நிறுத்தியுள்ளனர். ஸ்டாலின் எத்தனை அவதாரங்கள் எடுத்து வந்தாலும், அ.தி.மு.கவை அசைக்க முடியாது,” என பேசியுள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
