பாகிஸ்தான் பிரதமர் கத்தார் மன்னருடன் தோஹாவில் அவசர சந்திப்பு!

 
pakisthan pakisthan

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முற்றியுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் தற்போது ‘அமைதித் தூதுவராக’ களம் இறங்கியுள்ளார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் முன்னின்று நடத்திய முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட முயற்சியாகப் பிரதமர் ஷரீஃப் சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, நேற்று தோஹா சென்ற அவரை கத்தார் வான்வழியில் போர் விமானங்கள் சூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல் தானியை நேரில் சந்தித்த ஷரீஃப், ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த மத்தியஸ்தம் குறித்து விரிவாகப் பேசினார். சமீபத்தில் கத்தாரின் முக்கிய எரிபொருள் கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் அந்நாட்டைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்தச் சூழலில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் பங்கேற்கவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையைச் சுமூகமாக நடத்தக் கத்தாரின் ஆதரவை ஷரீஃப் கோரியுள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதித்துள்ள இந்தப் போரை நிறுத்த, பாகிஸ்தான் எடுக்கும் இந்த முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருபுறம் ஷரீஃப் கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்த, மறுபுறம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானில் முகாமிட்டு அந்நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தத் தொடர் ராஜதந்திர நகர்வுகள், வளைகுடா நாடுகளில் மீண்டும் அமைதியைக் கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை