மெரினாவில் பேனா சின்னம் அமைக்க கூடாது! தமிழக மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு!

 
உச்சநீதிமன்றம்

மெரினா கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு தடை கோரி தமிழக மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இலக்கியப் பணியை போற்றும் வகையில், அவரின் நினைவிடத்துக்கு அருகில் மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ரூ.81 கோடி செலவில், 42 மீட்டா் உயரத்தில் பேனா சின்னம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் பேனா சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டது. 

பேனா சின்னம்

இதனிடையே, கடலில் பேனா சின்னம் அமைக்க பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான கருத்துகேட்பு கூட்டத்தில் பேசிய சீமான், பேனா சின்னம் அமைத்தால் உடைப்பேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் இந்த விவகாரம்  சூடுபிடித்தது. அதேநேரம் பேனா சின்னம் அமைக்க ஆதரவும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்க தடை விதிக்கக் கோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக் கோரியும் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவா் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கான பதில் மனுவில் தமிழக அரசு, அனைத்துத் துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும், என தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்றம்

இதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடலில் பேனா சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

 

From around the web