கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவ-மாணவியர் விடிய விடிய போராட்டம்!

 
என்ஐடி
 


திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில், கல்லூரி மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த பணியாளரைக் கண்டித்தும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்திய திருச்சி என்ஐடி நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று இரவு முதல் திருச்சி என்ஐடி வளாகத்தில் மாணவ - மாணவியர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

என்ஐடி

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) கல்லூரி அமைந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 7,000க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். என்ஐடி கல்லூரி வளாகத்திற்குள் 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தங்கும் விடுதிகளும் இயங்கி வருகின்றன.

தற்போது மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளில் இன்டர்நெட் வசதிக்காக கேபிள் வயர் பொருத்தும் பணிகளில் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் ஓவல் விடுதிக்குள் கேபிள் வயர் பொருத்தம் பணியில் ஈடுபட்ட முதுகுளத்தூரைச் சேர்ந்த கதிரேசன் (38) என்பவர், விடுதி அறையில் தனியாக படித்துக் கொண்டிருந்த மாணவியை பார்த்ததும் ஆபாச அத்துமீறல் செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக கூச்சலிட்டபடியே விடுதி அறையில் இருந்து அலறியபடியே வெளியே ஓடி வந்து சக மாணவ - மாணவியரிடம் இது குறித்து கூறியுள்ளார். 

பின்னர் மாணவிகள் ஒன்று திரண்டு சென்று இது குறித்து விடுதி வார்டனிடம் முறையிட்ட போது,  “நீ ஆடைகளை ஒழுங்காக அணிந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது” என்று விடுதியின் வார்டன், அந்த மாணவிக்கு அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.

உடனே அதிர்ச்சியில் கல்லூரி மாணவி கண்ணீர்விட்டு கதறிய அழத் தொடங்கியதைக் கண்ட சக மாணவ  - மாணவியர் விடுதி அறைக்குள் மாணவிகள் இருக்கும்போது ஆண் பணியாளர்களை அனுமதித்தது எப்படி என்று கேள்வி எழுப்பினர். 

இது குறித்து அதன் பின்னரும், கல்லூரி நிர்வாகமும், விடுதி வார்டனும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர்களைக் கண்டித்து மாணவ - மாணவியர் நேற்றிரவு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.

என்ஐடி

பாதிக்கப்பட்ட மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்த நிலையில், மாணவியின் தந்தை சம்பவம் குறித்து உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்து திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

எனினும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும், விடுதி வார்டனின் பொறுப்பின்மையையும் கண்டித்தும் மாணவ - மாணவியர் தொடர்ந்து விடுதி முன்பு விடிய விடிய போராட்டம் நடத்தினார்கள். துவாக்குடி போலீசார், மாணவ - மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து இரவு முழுவதும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. பின்னர் முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவ - மாணவியரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி கோபால் சந்திரன் சென்று மாணவ, மாணவிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதையும் ஏற்காத மாணவ - மாணவியர் கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் ஜி.அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகிலா நேரில் வரவேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.

இந்நிலையில், “மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லவில்லை என்றால் தங்களது பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்வோம்” என போலீசார் எச்சரித்தனர். ஆனால் அப்படியும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது.

கடைசியாக இன்று அதிகாலை 4 மணியளவில் என்ஐடி இயக்குநர் அகிலா, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து விடுதி வார்டனை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி இன்று காலை 6 மணிக்கு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்த மாணவர்கள் புறப்பட்டனர். இதையடுத்து என்ஐடி நுழைவு வாயில் கதவு இழுத்து மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கதவருகே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயபிரகாசம் உள்ளிட்டோர் மாணவ - மாணவியரிட்ம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ்பி வீ.வருண்குமார் மாணவ - மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் விடுதி வார்டன் பேபி மன்னிப்புக் கோரியதை அடுத்து மாணவ - மாணவியர் போராட்டத்தை கைவிட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்ஐடி கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி ஒருவர், விடுதி வார்டனுக்கு தெரியாமல் 2 நாட்களாக விடுதியில் இருந்து வெளியேறிச் சென்று தனது ஆண் நண்பருடன் சுற்றிவிட்டு, மீண்டும் விடுதிக்கு வந்த போது, அந்த பகுதியில் சென்ற ஒருவனால் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web