அதிர்ச்சி... அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மற்றொரு பயங்கரவாதி... 2008 தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவன்!

 
டெல்லி பயங்கரவாதி

டெல்லி செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்ட புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர், அரியானாவின் பரிதாபாத் பகுதியில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தவர் என்பது தெரிய வந்துள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மேலும் பலரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இன்னொருவரின் பழைய பயங்கரவாத பின்னணி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2008ம் ஆண்டு அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் குழுவின் முக்கிய உறுப்பினரான மிர்சா ஷதாப் பெய்க், 2007 ம் ஆண்டு அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி

அகமதாபாத் வெடிகுண்டு தாக்குதலில் 56 பேரும், டெல்லியில் நடந்த தாக்குதலில் 20 பேரும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களுக்கு திட்டமிட்டவர்களில் ஒருவர் மிர்சா ஷதாப் பெய்க். உத்தரபிரதேசம் அசாம்ஹர் மாவட்டத்தை சேர்ந்த இவர் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் அசாம்ஹர் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் பணியிலும் அவர் நேரடியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது பெய்க் பாகிஸ்தானில் தங்கி இருப்பதாக விசாரணை அமைப்புகள் நம்புகின்றன. ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை தயாரிக்க ரியாஸ் மற்றும் யாசின் பட்கலுக்கு உதவியதும், புனே ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு தாக்குதலிலும் அவரது கை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி

டெல்லி ஜாகிர்நகர் பகுதியில் அவர் வசித்திருந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2008 ஆம் ஆண்டு பட்லா ஹவுஸ் என்கவுன்டரின் போது பெய்க் தலைமறைவானார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐஎம் பயங்கரவாதிகளில் சிலர் தண்டனை பெற்றிருந்தாலும் பெய்க் மற்றும் முகமது காலித் ஆகிய இருவர் இன்னும் தப்பிச் சென்றிருக்கின்றனர்.

இதற்கிடையில், அல் பலாஹ் பல்கலைக்கழக குழும தலைவர் ஜாவத் அகமது நிதி முறைகேடு, அங்கீகார விவகாரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ED-யால் கைது செய்யப்பட்டு 13 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார். டெல்லி கார் குண்டு தாக்குதலை நடத்திய மருத்துவர் உமர் மற்றும் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் பெய்க் ஆகியோரின் இணைப்புகள் தற்போது பெரிய பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டிருப்பதை காட்டுவதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?