கோவையில் அதிர்ச்சி... அடுத்தடுத்து இரண்டு யானைகள் உயிரிழப்பு!

 
யானை

கோவை மாவட்டத்தில் ஒரு பெண் யானை உட்பட அடுத்தடுத்து 2 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிகளில் காட்டுயானைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. காட்டில் சரிவர உணவு கிடைக்காத போதும், பாதைகள் மாறியும் இந்த யானைகள் அவ்வப்போது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் இந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட வனத்துறையினர்

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினருக்கான பயிற்சி மையம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் அடர்ந்த வனப்பகுதியாகும். நேற்று மாலை பயிற்சிக்காக சில வீரர்கள் வனப்பகுதி அருகே சென்ற போது, யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் ஆய்வு நடத்திய போது, உயிரிழந்தது ஆண் யானை என்பதும் சுமார் 12 வயதிருக்கலாம் எனவும் தெரிய வந்தது. இந்த யானை கடந்த சில நாட்களாக வாயில் காயத்துடன் சுற்றிவந்ததாக கூறப்படுகிறது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே 12 வயது ஆண் யானை உயிரிழப்பு

இந்த யானை அவுட்டுக்காய் எனப்படும் நாட்டுவெடிகுண்டு வெடித்து காயமடைந்ததா அல்லது பிற யானைகளுடனான சண்டையில் காயமடைந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய, யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, உடல் பாகங்களை ஆய்வுக்காக வனத்துறையினர் அனுப்பியுள்ளனர். இதனிடையே தடாகம் பகுதியில் யானை கூட்டம் ஒன்று சுற்றித்திரிந்ததாகவும், அதில் ஒரு யானை மட்டும் வனப்பகுதிக்கு அருகே விழுந்து கிடப்பதாகவும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. உடல்நலக்குறைவு காரணமாக இந்த பெண் யானை உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ள வனத்துறையினர், யானையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். அடுத்தடுத்து 2 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம், வன உயிரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web