நாளை சிவாஜி 97 வது பிறந்த நாள் விழா... முதல்வர் மரியாதை செலுத்துகிறார்!

 
சிவாஜி கணேசன் பிறந்தநாள்: மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
 

நாளை அக்டோபர் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  பிறந்தநாள் . அவரது  97வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.  

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தமிழ்நாடு முதலமைச்சர்   நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  97வது பிறந்த நாளை முன்னிட்டு, 1.10.2024 நாளை காலை 10.00 மணிக்கு  சென்னை அடையார். தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவரது   திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள  திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.  நாளை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, அரிய புகைப்படத் தொகுப்புகளுடன் புகைப்படக் கண்காட்சியும் இந்த மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன்  1.10.1928 ல்  பிறந்தார்.

சிவாஜி

"நடிப்பு தனது மூச்சு என்றும், நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில், நடிப்புதான் எனக்குத் தெய்வம்" என சிவாஜி கணேசன் பேசியுள்ளார்.   குழந்தைப் பருவத்திலிருந்தே  நடிப்பதில் ஆர்வம் கொண்டு பல்வேறு நாடகங்களில் தொடக்கத்தில்  நடித்து வந்தார். பேரறிஞர் அண்ணாவால்  எழுதப்பட்ட "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்கிற நாடகத்தில் சிவாஜியாக நடித்திருந்தார். அவரின் நடிப்புத் திறமையினை பாராட்டி தந்தை பெரியார்   "சிவாஜி கணேசன்" என பெயர் சூட்டினார். 
தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன்   கலைஞர்  கதை வசனத்தில் உருவாகிய பராசக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரைப்பட உலகில் 300க்கும்  மேற்பட்ட திரைப்படங்கள், 2 இந்தி படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 

சிவாஜி குடும்பம்


சிவாஜி கணேசனுக்கு  "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என பட்டங்கள் வழங்கப்பட்டன.  பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டியத் தமிழன், இராஜராஜ சோழன், கர்ணன் உட்பட  பல வரலாற்று சிறப்புமிக்க திரைப்படங்கள் காண்பவர்களின்  மனதில் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவரது நடிப்பு திறமையை பாராட்டி  பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதா சாகிப் பால்கே விருது உட்பட   பல விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  97வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள்,  மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web