ஆசிரியர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, சில மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவிகள் வலியுறுத்தியதால் நிலைமை மேலும் கவனம் ஈர்த்தது.
கடந்த 13.10.2025 அன்று பள்ளியில் படிக்கும் வேளாண் பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகளை இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மற்றும் ஆங்கில ஆசிரியை ஐஸ்வர்யா ஆகியோர் கள ஆய்விற்காக சென்னமரெட்டிபட்டி கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மாணவிகளுக்கு தியாகராஜன் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. ஆனால் புகார் செய்யப்பட்ட போது, தலைமையாசிரியர் சீபா பிளவர் லைட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவரும் பள்ளிக் கல்வித்துறையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தியாகராஜனை கைது செய்வதற்காக போலீசார் அதிரடிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில், தியாகராஜன் குற்றமற்றவர் என்றும், பள்ளியில் பணிபுரியும் சிலர் தூண்டியதால் பொய்ப் புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் வாதிட்ட மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிகள் எழுப்பிய இந்த போராட்டத்தால் அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் உருவானது. பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளான நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றனர். மாணவிகள் ஆசிரியர் மீது செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தனர்.

அதே நேரத்தில், இந்திய மாணவர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், இன்னும் கைது செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மாடசாமி வெளியிட்ட அறிக்கையில், “மாணவிகள் புகார் அளித்தும், தலைமையாசிரியர் அலட்சியமாக இருந்தும் எந்த நடைமுறையும் வேகமாக நடைபெறவில்லை. போலீசாரின் செயல்பாடு தாமதமாக உள்ளது” என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார் நேரத்தில் தலையிடாத தலைமையாசிரியர் மீதும் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
