விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு... உறவினர்கள் கதறல்!
மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தினேஷ்குமார் (31) என்ற இளைஞர் வியாழக்கிழமை திடீரென உயிரிழந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தினேஷ்குமார் மீது மற்றும் அவரது நண்பர்கள் மீது சில வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, அவர் காவல் வாகனத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், வண்டியூர் பகுதி கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமாரின் குடும்பத்தினரும், உறவினர்களும் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு முன்பு திரண்டு போலீசாரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். “தினேஷ்குமாரை விசாரணையின் பெயரில் அடித்து கொலை செய்து, அதை மறைக்க போலீசார் முயற்சிக்கின்றனர்” என அவர்கள் கடுமையாக குற்றம் சாட்டினர். மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பின்னர், இவர்கள் மாட்டுத்தாவணி அருகே எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் வாகனங்கள் மாற்றுப் பாதைகளுக்கு திருப்பப்பட்டன. தினேஷ்குமாரின் உடல், வெள்ளிக்கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குற்றவியல் நடுவர் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
