அதிர்ச்சி... குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... தீவிர விசாரணை !
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது என்பது குறித்து மக்கள் எழுப்பிய புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.
பெரும்பாலும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், கடந்த சில நாட்களாக குடிநீரில் துர்நாற்றம் வீசியது. அதனை தொடர்ந்து சிலர் மேல்நிலை தொட்டியை பரிசோதித்த போது, அதில் மலம் கலந்திருந்தது தெரிய வந்தது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து மக்கள் ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்களது புகாரைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் துணை ஆட்சியர், ஊராட்சி உதவி இயக்குநர், வாடிப்பட்டி வட்டாட்சியர், சமயநல்லூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர், சோழவந்தான் ஆய்வாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். “இது சாதாரண விஷயம் இல்லை. இந்தக் காலனியில் புதிய நீர்த்தேக்க தொட்டி நிறுவப்பட்டு சில நாட்களே ஆகியுள்ளன. அந்த தொட்டியில் இவ்வாறு மலம் கலந்திருப்பது மிகவும் வேதனையானதும், அவமதிப்பானதும்” என அவர்கள் கூறுகின்றனர். “சிறுவர்கள் தவறுதலாக ஏறி விட்டார்கள்” என்ற விளக்கத்தை மக்கள் முற்றிலும் மறுக்கிறார்கள்.

“இது யாராலும் தீங்கிழைக்கப்பட்ட செயல்” என மக்கள் தீவிரமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, காரணமானவர்களை கண்டுபிடித்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் பதில் இது குறித்து “இரண்டு நாட்களுக்கு முன்பு குடிநீர் வரவில்லை என கூறி, சில சிறுவர்கள் தொட்டிக்கு ஏறியதாக தகவல் உள்ளது. இருப்பினும் இது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார். தற்போது தொட்டியில் கலந்த மலத்தை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது உள்ளிட்ட அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
