நாடு முழுவதும் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஏஐ’ பாடம் அறிமுகம் - மத்திய கல்வித் துறை அறிவிப்பு!
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (Computational Thinking – சிடி) தொடர்பான கல்வியை இளம் வயதிலேயே மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் இந்த பாடம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய கல்வி அமைச்சகத்தின் உயரதிகாரிகள், சிபிஎஸ்இ (CBSE), என்சிஇஆர்டி (NCERT), கேவிஎஸ் (KVS), என்விஎஸ் (NVS) பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றனர்.

மேலும், ஏஐ மற்றும் சிடி பாடங்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையிலான நிபுணர் குழுவை சிபிஎஸ்இ அமைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் சஞ்சய் குமார் கூறுகையில், “நம்மைச் சுற்றி விரைவாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு கல்வியை அடிப்படை திறனாகக் கருதுவது அவசியமாகியுள்ளது. அதனை முன்னிட்டு ஏஐ பாடத்தை பள்ளிக் கல்வியில் சேர்க்க தீர்மானித்துள்ளோம். இது தேசிய கல்வி கொள்கையுடன் இணைந்து செயல்படும். மாணவர்களின் எதிர்கால திறன்களை மேம்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக இது அமையும்” என்றார்.

இந்தத் திட்டத்தின் படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பிலிருந்து ஏஐ மற்றும் சிடி பாடங்கள் சேர்க்கப்படும். இதன்மூலம் மாணவர்கள் சிறு வயதிலேயே தீவிர சிந்தனை, படைப்பாற்றல், மற்றும் செயற்கை நுண்ணறிவை நெறிமுறைப்படிக் கையாளும் திறனை கற்றுக்கொள்ள முடியும்.
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, கற்பித்தல் வீடியோக்கள், மற்றும் பாடத் திட்ட உதவிகள் வழங்கப்படும். ஏஐ கல்வி திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படும் வகையில் சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி இணைந்து பணியாற்றும். இந்தப் புதிய பாடத்திட்டம் 2026–27 கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
