இயக்குநர் வி.சேகர் கடந்து வந்த பாதை.. இன்று திருவண்ணாமலையில் இறுதிசடங்குகள்!
இயக்குநர் வி.சேகர் நேற்று காலமான நிலையில், அவரது உடல் சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு திருவண்ணாமலை கொண்டு செல்லப்படுகிறது. திருவண்ணாமலையில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.
தமிழ் சினிமாவில் குடும்ப உணர்வுகளை நுணுக்கமாகப் பேசும் இயக்குநர்களில் ஒருவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இயக்குநர் வி. சேகர், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல் சிக்கல்கள், கூட்டுக்குடும்பங்களின் அழகு, பெண்களின் உரிமை ஆகியவற்றை இயல்பான கதைகளில் வடிவமைத்து மக்களின் இதயத்துக்குள் நுழைந்தவர்.
தொலைக்காட்சி தொடர்கள் முதல் வெற்றிப் படங்கள் வரை பல்வேறு தளங்களில் தாக்கத்தைச் செலுத்திய இவரது வாழ்க்கைப் பயணம் சவால்களும் சாதனைகளும் இணைந்த ஒன்றாகுதிருவண்ணாமலைக்கு அருகேயுள்ள நெய்வாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எஸ். வெங்கடேசன்–பட்டம்மாள் தம்பதியின் மூத்த மகனாக 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வி. சேகர் பிறந்தார். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் உடன் வளர்ந்த அவர், நெய்வாநத்தம் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து, பின்னர் வேட்டவலம் உயர்நிலைப் பள்ளியில் மேற்படிப்பையும், அதில் இரண்டாவது இடத்தையும் பெற்றார். பியூசி படிப்பை திருவண்ணாமலையில் முடித்த பிறகு, அவரின் உறவினர் செ. கண்ணப்பன் உதவியால் ஏவி.எம். ஸ்டுடியோவில் 19ம் வயதில் உதவியாளராக இணைந்தார்.

பின்னர் மாநகராட்சி சுகாதார துறையில் மலேரியா ஒழிப்பு பணியில் 15 ஆண்டுகள் பணியாற்றியபோதும், கல்வியைத் தளர்ச்சியின்றி தொடர்ந்தார். மாலை நேரங்களில் நந்தனம் கலைக்கல்லூரியில் பி.ஏ., அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. படிப்பையும் முடித்தார். சிறு வயதிலிருந்து வாசிப்பில் ஆர்வம் கொண்ட அவர், உலக இலக்கியமும், தமிழ் இலக்கியமும் இணைந்து தன் சிந்தனையை வடிவமைத்தன.
சினிமா ஊடகத்தின் தாக்கத்தை உணர்ந்த அவர், பகுதி நேரமாக எடிட்டர் லெனினிடம் பயிற்சி பெற்று, பின்னர் கே. பாக்யராஜின் கதைஇலாகாவில் இரண்டு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றினார். அதன் பின் ‘நீங்களும் ஹீரோதான்’ என்கிற தனது முதல் படத்தை இயக்கினார். எதிர்பார்த்த வெற்றியை அளிக்காத அந்தப் படத்திற்கு பின், மீண்டும் அரசுப் பணியில் சேர்ந்தாலும், சினிமா மீதான ஆர்வம் குறையவில்லை.

பின்னர் ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’ படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இந்தப் படம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, இந்தி, ஒரியா என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, வசூலில் சாதனைகள் படைத்தது. தொடர்ந்து ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘எல்லாமே என் பொண்டாட்டிதான்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘ஆளுக்கொரு ஆசை’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கினார். கன்னடப் படமான ‘ஹெந்தீர் தர்பார்’-ஐயும் இயக்கி அங்கும் பாராட்டைப் பெற்றார்.
திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற தனது நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்த அவர், ‘ஏய்’ படத்தையும் தயாரித்தார். பிரபு நடித்த ‘பொண்ணு பாக்கப் போறேன்’ படத்துக்கு திரைக்கதை எழுதியதுடன், ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘வீட்டுக்கு வீடு’ போன்ற தொடர்கள் மூலம் சின்னத்திரையிலும் தனித்த அடையாளம் கிடைத்தது. ‘பள்ளிக்கூடம்’ படத்தில் சிறிய வேடத்திலும் நடித்தார்.
தனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய ஆதராவாக இருந்த மாமா செ. கண்ணப்பனின் மகள் தமிழ்செல்வியையே திருமணம் செய்துகொண்டார். மலர்க்கொடி எனும் மகளும், காரல் மார்க்ஸ் எனும் மகனும் இவர்களுக்கு உள்ளனர். மகன் காரல் மார்க்ஸ் நடித்த ‘சரவண பொய்கை’ படத்தையும் சேகர் இயக்கினார்.
தமிழ் குடும்பங்களின் வாழ்வியலை இயல்பாகக் காட்சிப்படுத்திய இயக்குநராக வி. சேகர் மக்களின் நினைவில் நிலைத்திருப்பவர். அவரின் படங்கள் இன்றும் பல குடும்பங்களில் பேசப்படுவதற்குக் காரணம், வாழ்வின் எளிமையையும் உணர்ச்சியையும் பசுமையாகப் பதியச் செய்தது தான்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
